காடுவெட்டி குரு நினைவு மணிமண்டபம்: நாளை மறுநாள் அடிக்கல் நாட்டு விழா- ஜி.கே. மணி

வன்னியர் சங்கத்தின் தலைவராக இருந்த காடுவெட்டி ஜெ. குருவின் மணி மண்டபத்துக்கான அடிக்கல் நாட்டு விழா நாளை மறுநாள் நடைபெறும் என பாமக தலைவர் ஜி.கே. மணி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஜி.கே. மணி வெளியிட்ட அறிக்கை:

வன்னியர் சங்கத் தலைவர் ஜெ.குருவுக்கு நினைவு மணிமண்டபம் அமைக்கப்படவுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டுவிழா காடுவெட்டியில் நாளை மறுநாள் (13.12.2018) வியாழக்கிழமை நடைபெறுகிறது.

குரு மறைவைத் தொடர்ந்து புதுச்சேரியிலும், காடுவெட்டி கிராமத்திலும் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வுகளில் கண்ணீர் உரையாற்றியவர் ராமதாஸ். ஜெ. குரு வாழ்ந்த காடுவெட்டி கிராமத்தில் அவருக்கு நினைவு மணிமண்டபம் அமைக்கப்படும்.

வன்னியர் கல்வி அறக்கட்டளை சட்டக்கல்லூரி வளாகத்திற்கு மாவீரன் குரு பெயர் சூட்டப்படும். அந்த வளாகத்தில் குரு நடந்து வருவது போன்ற திருவுருவச்சிலை அமைக்கப்படும்’’ என்று அறிவித்திருந்தார்.

சட்டக்கல்லூரி வளாகத்திற்கு ஜெ.குரு பெயர் சூட்டப்பட்டதுடன், அவரது திருவுருவச் சிலையும் கடந்த 16.09.2018 அன்று திறந்து வைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக காடுவெட்டி கிராமத்தில் அவரது நினைவு மணிமண்டபம் அமைக்கப்படவுள்ளது. காடுவெட்டி கிராம மக்கள் கூடிப் பேசி ஒருமனதாக எடுத்த முடிவின் அடிப்படையில், கும்பகோணம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் (எண் 36) அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்டம் காடுவெட்டி கிராமத்தில் உள்ள வன்னியர் கல்வி அறக்கட்டளை நிலத்தில் ஜெ.குருவின் நினைவு மணிமண்டபம் சிறப்பாக கட்டியெழுப்பப்பட உள்ளது.

இதற்கான அடிக்கல் நாட்டுவிழா மணிமண்டபம் அமைக்கப்படவுள்ள நிலத்தில் 13.12.2018 வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்த விழாவில் பா.ம.க. மற்றும் வன்னியர் சங்கத்தின் நிறுவனர் ராமதாஸ் பங்கேற்று குருவின் நினைவு மணிமண்டபம் அமைக்க அடிக்கல் நாட்டுகிறார். அதற்கான கல்வெட்டை பா.ம.க. இளைஞரணித் தலைவரும், தருமபுரி மக்களவை உறுப்பினரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி இராமதாஸ் திறந்து வைக்கவுள்ளார்.

அடிக்கல் நாட்டு விழாவிற்கு பா.ம.க. தலைவரும், வன்னியர் கல்வி அறக்கட்டளை அறங்காவலருமான ஜி.கே.மணி தலைமை ஏற்கிறார். சமூக முன்னேற்ற சங்கத்தின் தலைவர் முனைவர் ச. சிவப்பிரகாசம், குருவின் துணைவியார் சொர்ணலதா குருநாதன், மணிமண்டபம் அமைக்க வன்னியர் கல்வி அறக்கட்டளைக்கு நிலம் கொடுத்த தனி வீடு நா. ஆனந்த மூர்த்தி, அவரது சகோதரர் தனி வீடு. நா.ரவி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

வன்னியர் கல்வி அறக்கட்டளை அறங்காவலர்கள் மருத்துவர் இரா.கோவிந்தசாமி, மருத்துவர் பி. சுந்தர்ராஜன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கின்றனர். வன்னியர் சங்கச் செயலாளர் க.வைத்தி, சமூக முன்னேற்ற சங்கத்தின் மாநில செயலாளர் ஜெய்சங்கர் மற்றும் காடுவெட்டி கிராம ஊர்ப் பெரியவர்கள், காடுவெட்டி கிராம மண்டகப்படி பிரமுகர்களும் குருவின் நினைவு மண்டப அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்கின்றனர்.

இந்த நிகழ்ச்சியில் பாட்டாளி மக்கள் கட்சி, சமூக முன்னேற்ற சங்கம், வன்னியர் சங்கம், உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்தவர்களும், காடுவெட்டி கிராமப் பொதுமக்களும் பெருமளவில் கலந்து கொள்வார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு ஜி.கே. மணி தெரிவித்துள்ளார்.

More News >>