திமுக கூட்டணியை எந்த சக்தியாலும் சிதறடிக்க முடியாது: வைகோ, திருமா கூட்டாக முழக்கம்!

திமுக கூட்டணியை எந்த சக்தியாலும் சிதறடிக்க முடியாது என்று மதிமுக பொது செயலாளர் வைகோவை சந்தித்த விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

அண்மையில் டிவி பேட்டி ஒன்றில் தமது வீட்டில் தலித்துகள் வேலை செய்கிறார்கள் என வைகோ கூறியிருந்தார். இதை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு விமர்சித்திருந்தார். இதனால் கொந்தளித்த வைகோ, திருமாவளவனை மறைமுகமாக தாக்கினார். திருமாவளவனும் இதற்கு பதிலடி கொடுத்தார்.

இதனால் திமுக கூட்டணியில் பிளவு ஏற்படும் சூழ்நிலை உருவானது. இந்த நிலையில்

சென்னையில் இன்று வைகோவை, தொல்.திருமாவளவன் சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களை கூட்டாக இருவரும் சந்தித்தனர்.

அப்போது, வைகோ கூறியதாவது: 5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் மதச்சார்பின்னை பாதுகாக்கப்படும், கூட்டாட்சி தத்துவம் வலம் பெறும். இந்துத்துவ சனாதன சக்திகளின் கொட்டம் ஒடுக்கப்படும் என்ற நம்பிக்கை வந்துள்ளது.

சர்வதிகார போக்கில் ஆட்சி நடத்தும் நரேந்திர மோடி அரசுக்கு எதிராக ஒரு அலை வீசுகிறது. 2019ல் மாநில கட்சிகளின் கூட்டமைப்பும், காங்கிரஸ் கட்சியும் இணைந்து அரசமைக்கப்போகிறது.

வரும் குளிர்கால கூட்டத்தொடரிலே அணை பாதுகாப்பு மசோதா நிறைவேற்ற மத்திய அரசு துடிக்கிறது. அப்படி, நிறைவேற்றப்பட்டால் நாட்டிலேயே தமிழகம் தான் அதிகளவில் பாதிக்கப்படும்.

தேர்தல் முடிவு மகிழ்ச்சியையும், நம்பிக்கையும் தந்திருக்கிறது. இனி, பாஜகவும், பாஜகவுடனான கூட்டணியும் குறிப்பாக தென்னிந்தியாவில் ஆட்சியமைக்க முடியாது.தொல்.திருமாவளவன் உடனான நட்பு என்பது, நீர் அடித்து நீர் விலகாது; காற்றிலே பிரிவினை ஏற்படுதுத முடியாது. அதுபோல தான், நானும் திருமாவும் என்றார்.

தொல்.திருமாவளவன் கூறுகையில், வைகோவின் பேச்சைக் கேட்டு வளர்ந்தவன் நான். உள் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசத் தெரியாதவர் அவர் என்றார்.

 

 

More News >>