15 தொகுதிகள் எனக்கு, மத்ததெல்லாம் உங்களுக்கு - ராகுலிடமே பேரம் பேசி மூக்குடைபட்ட தினகரன்!
காங்கிரஸ் கூட்டணிக்காக தினகரன் நடத்திய பேரங்கள் வெளியில் வரத் தொடங்கியுள்ளன. திருநாவுக்கரசரின் வேண்டுகோளுக்கு ராகுல் செவிசாய்க்காததால் தினகரனின் ஆட்டம் ஓய்ந்துவிட்டதாகச் சொல்கின்றனர் காங்கிரஸ் பொறுப்பாளர்கள்.
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக இருக்கிறார் தினகரன். அவருக்கு ஆதரவு தெரிவித்த 18 அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்களும் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.
இதனால் அந்த 18 தொகுதிகளுக்கும் ஏற்கனவே காலியாக உள்ள திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடக்க இருக்கிறது. ' சபைக்குள் அவர் மட்டும் போய் வருகிறார். அவரை ஆதரித்த நாம் நடுத்தெருவில் நிற்கிறோம். கைச்செலவுக்குக்கூட காசு தர மறுக்கிறார்' என அவர்கள் புலம்பி வருகின்றனர்.
இனியும், அதிமுக நம்மோடு வரும், இரட்டை வரும் என தினகரன் சொல்வதை நம்புவதற்கும் அவர்கள் தயாராக இல்லை. இதனை ஈடுகட்டுவதற்காக, 'திமுகவைக் கழட்டிவிட்டு காங்கிரஸ் கட்சி நம்மோடு கூட்டணி வைக்கும். இந்த அணிக்குள் திருமாவளவன் வருவார். அவருக்கு எம்ஓஎஸ் (இணை அமைச்சர்) வாங்கித் தருவோம்.
சின்னம்மாவும் வெளியில் வந்துவிடுவார். பழையபடி நம்முடைய ஆட்டம் தொடங்கப் போகிறது' என ஆதரவாளர்களுக்கு உற்சாகமூட்டினார். இந்த வார்த்தைகளை நம்பியும் அவர்கள் ஏமாந்து போனார்கள்.
அதே சமயத்தில் திருநாவுக்கரசரை முன்வைத்து தினகரன் பேசிய பேரங்களைப் பற்றித்தான் பேசிக் கொள்கிறார்கள் கதராடைக் கட்சி பொறுப்பாளர்கள். ' பாராளுமன்றத் தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. கூட்டணி தொடர்பான வியூகங்களும் வகுக்கப்பட்டு வருகின்றன.
இந்த முறை ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்றோரும் அரசியலில் ஈடுபட்டு இருப்பதால் தேர்தலில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப்பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் சமீபத்தில் அளித்த பேட்டியில், வருகிற தேர்தல்களில் தி.மு.க.வுடனோ, பா.ஜனதாவுடனோ நாங்கள் ஒருபோதும் கூட்டணி வைக்க மாட்டோம்,
அது தற்கொலைக்கு சமமானது. அதே நேரத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள் அல்லது பிராந்திய கட்சிகளுடன் கூட்டணி வைக்க மாட்டோம் என்று சொல்ல முடியாது' என தெரிவித்தார். இதன்மூலம் காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகளுடன் கூட்டணி சேரும் விருப்பத்தை தினகரன் வெளிப்படுத்தி உள்ளார்.
ஆனால் காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள் அவரை ஏற்கவில்லை. தாங்கள் தி.மு.க. கூட்டணியில் இருப்பதாகவும் அதில் புதிய கட்சிகள் இணைய வாய்ப்பு இல்லை என்றும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி தமிழக காங்கிரஸ் செயலாளர் சஞ்சய்தத் கூறும்போதும், தி.மு.க.வுடனான எங்கள் கூட்டணி மிகவும் பலமாக உள்ளது. இந்த கூட்டணியில் மற்ற கட்சிகள் சேர விரும்பினால் அதுபற்றிய இறுதி முடிவை காங்கிரஸ் மேலிடம் எடுக்கும் என்றார்.
தினகரன் தூது முயற்சிக்குப் பக்கவாத்தியமாக இருந்தவர் திருநாவுக்கரசர். அவர் மூலமாக ராகுல் காந்தியிடம் பேரம் நடத்தியுள்ளனர். ' எங்களுக்கு 15 சீட் கொடுத்துவிடுங்கள். மற்ற இடங்களை நீங்களும் கூட்டணிக் கட்சிகளும் பிரித்துக் கொள்ளுங்கள். மோடிக்கு எதிராக நம்முடைய அணிதான் ஜொலிக்கப் போகிறது. திமுகவை நம்பிப் பலனில்லை. ஆர்கேநகரிலேயே டெபாசிட்டை இழந்தவர்கள் அவர்கள்' என தினகரன் பேசியிருக்கிறார்.
இதை மேலிடத்திலும் வலியுறுத்தியிருக்கிறார் திருநாவுக்கரசர். ஆனால், சோனியா காந்தி உறுதியாக இருந்ததால்தான் திமுக அணி சாத்தியப்பட்டது என்கின்றனர்.
-அருள் திலீபன்