அடுத்த அவமானகரமான தோல்வி யாருக்கு? - பற்றவைத்த திண்டுக்கல் பாலபாரதி
”இது வெற்றிகரமான தோல்வி” எனக் கூறி ட்ரெண்டிங்கில் இடம் பிடித்திருக்கிறார் தமிழிசை. மோடி அலை ஓயாது எனவும் ட்வீட் செய்திருக்கிறார் அவர். இதை அதிமுக அரசுடன் முடிச்சுப் போட்டு கிண்டலடித்திருக்கிறார் முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி.
ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உட்பட 5 மாநிலத் தேர்தல் முடிவுகளில் பிஜேபிக்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்தத் தோல்வி குறித்து பத்திரிகையாளர்களிடம் பேசிய தமிழிசை சௌந்தரராஜன், ` "5 மாநிலத் தேர்தல்களில் தோல்வியைத் தழுவினாலும் அவற்றை உதறித் தள்ளிவிட்டு மிகப்பெரும் வெற்றியை நாடாளுமன்றத் தேர்தலில் நாங்கள் பெறுவோம்.
5 மாநிலத் தேர்தல் முடிவுகள் எந்த விதத்திலும் எங்களுக்கு தோல்வி அல்ல. கடுமையாக உழைத்த பிரதமர், தேசியத் தலைவர், தொண்டர்கள், நிர்வாகிகளுக்கு நன்றி. ராஜஸ்தான், மத்தியப் பிரதேசத்தில் நெருக்கமான போட்டி. இரண்டு மாநிலங்களிலும் வெற்றிகரமான தோல்வி என்றுதான் எடுத்துக்கொள்ள முடியும். பெரும்பான்மையுடன் காங்கிரஸ் வெற்றி பெறவில்லை. சத்தீஸ்கரில் வேண்டுமானால் தோல்வியை ஒப்புக்கொள்கிறேன். நாங்கள் எதிர்பார்த்தது வேறு
அம்மாநில முதல்வர் 15 ஆண்டுகள் ஆட்சியில் இருந்திருப்பதால் அரசுக்கு எதிரான மனநிலை அங்கு இருந்திருக்கிறது. கூட்டணி வெற்றி பெறும் என எதிர்க்கட்சிகள் சொல்வது பொய் என்பதை தெலங்கானா நிரூபித்திருக்கிறது.
எதிர்க்கட்சிகள் ஏற்படுத்திய கூட்டணி எந்தவிதத்திலும் வெற்றியைத் தராது என்பதை தெலங்கானா நிரூபித்திருக்கிறது. மாநில அளவில் உள்ள பிரச்சினைகளால் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசத்தில் தோல்வியை அடைந்துள்ளோம்.
கூட்டணி வெற்றி பெறும் என்று சொன்னால், தெலங்கானாவில் முடிவுகள் வேறு மாதிரி வந்திருக்க வேண்டும். சந்திரபாபு நாயுடு தலைமையிலான கூட்டணி தோல்வி அடைந்திருக்கிறது.
நாடாளுமன்றத் தேர்தலுக்கான வெற்றியின் ஆரம்பமாகத்தான் இதனை எடுத்துக்கொள்ள முடியும். இன்று வாக்கு இயந்திரங்கள் எல்லாம் சரியாக வேலை செய்கிறதா என்பதை காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தெளிவுபடுத்த வேண்டும்' எனக் கோபத்தை வெளிப்படுத்தினார்.
இதைப் பற்றி முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள திண்டுக்கல் முன்னாள் எம்எல்ஏவும் மார்க்சிஸ்ட் கட்சி நிர்வாகியுமான திண்டுக்கல் பாலபாரதி, இதே அவமானகரமான தோல்வி அதிமுகவிற்கும் உண்டு எனக் குறிப்பிட்டிருக்கிறார். இதற்கு நெட்டிசன்கள் மத்தியில் வரவேற்பு பெருகி வருகிறது.