பாவம் பசியின் கொடுமை டெலிவரி பாயை மன்னிக்க சொன்ன விக்னேஷ் சிவன்!
வாடிக்கையாளரின் உணவை சாப்பிட்ட ஜோமேட்டோ டெலிவரி பாயை மன்னிக்கக் கூறிய விக்னேஷ் சிவனுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.
ஆன்லைனில் உணவை ஆர்டர் செய்து உண்பதையே தற்போது ஃபேஷனாக பலரும் கருதுகின்றனர். விருப்பப்பட்ட ஹோட்டலுக்கு சென்று சாப்பிட முடியாததால், அலுவலகத்திலோ அல்லது வீட்டிலோ இருந்தபடியே, எந்த உணவகத்தின் சுவையான உணவையும் நாம் இருக்கும் இடத்திற்கே ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து கொண்டு வரலாம்.
வாடிக்கையாளர்களின் இந்த தேவையை உணர்ந்த பன்னாட்டு நிறுவனங்கள் பல ஆன்லைன் உணவு ஆப்களை அறிமுகம் செய்தன.ஸ்விக்கி, ஊபர் ஈட்ஸ், ஜோமேட்டோ, ஃபுட் பாண்டா போன்ற பல நிறுவனங்கள் இந்த சேவையை வாடிக்கையாளர்களுக்கு செய்து வருகின்றன.
சமீபத்தில், ஸ்விக்கி ஊழியர்கள், தங்களுக்கான தேவைகளை நிறுவனம் செய்வதில்லை. ஊதிய உயர்வு இல்லை என போர்க்கொடி தூக்கினர்.
இந்நிலையில், இன்று, ஜோமேட்டோ ஊழியர் ஒருவர், வாடிக்கையாளர்களுக்கு கொடுக்க வேண்டிய உணவு பார்சல்களை அழகாக பிரித்து, ஒவ்வொரு பார்சலிலும் கொஞ்சம் கொஞ்சம் உணவை உண்டு, பார்சலை மீண்டும் அழகாக புதிதாக பார்சல் செய்து வைக்கும் வீடியோ வெளியாகி வைரலானது.
பலரும் அந்த ஊழியரை திட்டித் தீர்த்து வந்த நிலையில், அன்பான இயக்குநர் என்ற பெயரை எடுத்த விக்னேஷ் சிவன், ’இது பொறுப்பை மறக்கடித்த பசிக்கொடுமை; அவரை மன்னித்து விடுங்கள்’ என்று டுவிட்டரில் பதிவிட்டார். இதனை பார்த்த பலரும் உண்மையை உணர்ந்து விக்னேஷ் சிவனை பாராட்ட துவங்கி உள்ளனர்.
மேலும், இதுபோன்ற உணவு நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு தேவையான சம்பளம் மற்றும் உணவுப் படி தர வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்துள்ளனர்.