வேர் இஸ் மை ட்ரைன்? செயலியை கூகுள் வாங்கியது
Where is My Train? (என்னுடைய ரயில் எங்கே இருக்கிறது?) என்ற செயலி இந்தியாவில் தொடர்வண்டி குறித்த தகவல்களை தரும் செயலிகளுள் முக்கியமானது. இந்தச் செயலியை உருவாக்கிய குழுவினர் தற்போது கூகுள் நிறுவனத்தில் இணைந்துள்ளனர்.
அமெரிக்காவை சேர்ந்த தொழில்நுட்ப பொழுதுபோக்கு நிறுவனம் டிவாவ் (TiVo). இதில் பணியாற்றிய ஐந்து பேர் சேர்ந்து பெங்களூருவில் சிக்மாய்ட் லேப்ஸ் என்ற சிறு நிறுவனத்தை ஆரம்பித்தனர். அந்த நிறுவனமே 'வேர் இஸ் மை ட்ரைன்' என்ற செயலியை இயக்கி வருகிறது.
'வேர் இஸ் மை ட்ரைன்' இந்தியாவில் மிகவும் பிரபலமான செயலியாகும். 1 கோடிக்கும் மேலானவர்கள் இதை பதிவிறக்கம் செய்துள்ளனர். செல்போன் டவர் தகவல் தொடர்பினை பயன்படுத்தி இது ரயில்கள் இருக்கும் இடத்தை கண்டறியும். இந்திய ரயில்வேயின் ஐஆர்சிடிசி (IRCTC) ரயில்வே அட்டவணையையும் இது ஒருங்கிணைக்கிறது. புறப்படும் இடம் மற்றும் சேருமிடத்தை கொண்டு அல்லது ரயில்களின் பெயரின் ஒரு பகுதியை கொண்டு இந்தச் செயலி மூலம் விவரங்களை அறிய முடியும்.
சிக்மாய்ட் லேப்ஸ் நிறுவனத்தை கூகுள் வாங்கியுள்ளதால், அதில் பணியாற்றும் 10 பேர் கொண்ட குழுவினரும் கூகுள் நிறுவனத்தில் இணைகின்றனர். "இன்னும் அநேக மக்களுக்கு தொழில்நுட்பம் மற்றும் தகவலை கொண்டு செல்லும்படி கூகுள் நிறுவனத்துடன் இணைவது பரவசமளிக்கிறது," என்று சிக்மாய்ட் லேப்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.