சட்டசபை தேர்தல்களில் காங். விஸ்வரூபம்! ரசிக்க முடியாமல் நெருக்கடியில் திமுக!

நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் உடன் இணைந்து மெகா கூட்டணி அமைக்கலாம் என்றும் காங்கிரஸ் கட்சிக்கு 7 சீட்டும், கம்யூனிஸ்ட்கள், மதிமுக, முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளுக்கு 5 சீட்டும் என மொத்தம் 12 சீட்டுகள் கொடுத்து விட்டு 28 சீட்களில் திமுக நிற்க முடிவு செய்து இருந்தது. மேலும், தோழமைக் கட்சிகளிடத்தில், 'உதயசூரியன் சின்னத்தில் நிற்க வேண்டும் எனவும் 'அன்பாக ' நிபந்தனையும் போட்டிருந்தது திமுக.

ஆனால் காங்கிரசின் தற்போதைய வெற்றி அக்கட்சி தலைமைக்கு பெரிய உற்சாகத்தையும் குதூகலத்தையும் தந்துள்ளது. இதனால், நாடாளுமன்ற தேர்தலில் மாநில கட்சிகளோடு கூட்டணி அமைக்கும் மாநிலங்களில் பார்கெய்ன் பவரை அதிகரிக்கச் செய்யும் என்கிறார்கள் காங்கிரஸ் தலைவர்கள்.

அந்த வகையில், திமுக கூட்டணியில் தங்களுக்கான எண்ணிக்கையை இரட்டை இலக்கத்தில் கேட்க காங்கிரஸ் தயங்காது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். குறைந்தது 15 சீட்டுகள் கேட்டு 13 சீட்டுகளாவது வேண்டும் என காங்கிரஸ் அடம் பிடிக்கும் என்றும், காங்கிரசின் கோரிக்கையை ஏற்றால்தான் கூட்டணிக்கு ஒத்துக்கொள்ளும் சூழ்நிலை உருவாகியிருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

அதனால், இடியாப்ப சிக்கலில் திமுக மாட்டிக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது. இந்தச் சூழல், திமுகவுக்கு கூட்டணி ரீதியான நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது.

தமது அரசியல் பார்ட்னரின் (காங்கிரஸ்) தேர்தல் வெற்றியை ரசிக்க முடியாமல் இருக்கிறது திமுக. ஆனால், அதை வெளிப்படுத்திக்கொள்ளாமல் ராகுலுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார் ஸ்டாலின். இந்த புதிய பஞ்சாயத்தை ஸ்டாலின் எப்படி எதிர்கொள்வார்? என்பதுதான் அரசியல் வட்டாரங்களின் எதிர்பார்ப்பு.

-எழில் பிரதீபன்

More News >>