செந்தில் பாலாஜி மூலம் தினகரனுக்கு செக் வைத்த இளவரசி மகள் கிருஷ்ணபிரியா!

திமுகவுக்குப் போவாரா செந்தில்பாலாஜி என கரூர் அதிமுக களைகட்டிக் கொண்டிருக்கிறது. செந்தில்பாலாஜி மனதை மாற்றியது இளவரசி குடும்பம். அவர்களை சும்மா விடப்போவதில்லை என ஆத்திரத்தை வெளிப்படுத்தினாராம் தினகரன்.

அ.ம.மு.க துணைப் பொதுச் செயலாளர் தினகரனுக்கே தண்ணி காட்டிக் கொண்டிருக்கிறார் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி. கடந்த ஒரு வாரமாக தினகரன் தரப்பினரின் போன் கால்களை அட்டெண்ட் செய்யாமல், தனக்கு வேண்டிய நண்பர் வீட்டில் அடைக்கலமாகியிருக்கிறார்.

அவரை சமாதானப்படுத்துவதற்காக தஞ்சாவூர் ரங்கசாமி உள்ளிட்ட நிர்வாகிகளை நேரடியாக கரூருக்கே அனுப்பி வைத்தார். அவர்களது சமாதானத் தூதை நிராகரித்துவிட்டார் செந்தில்.

இதைப் பற்றிப் பேசியபோது, தினகரனுக்கு அதிமுகவைக் கைப்பற்றுவது எல்லாம் நோக்கம் கிடையாது. ஸ்டாலினை எதிர்த்து முதல்வர் ஆக வேண்டும் என நினைக்கிறார்.

அதிமுகதான் நம்முடைய உயிர் மூச்சு. அங்கு மறுபடியும் போவதைப் பற்றிய சிந்தனையே அவருக்கு இல்லை. தகுதிநீக்க வழக்கில் மேல்முறையீடு செய்யவதை அவர் விரும்பவில்லை. எங்கே நாமெல்லாம் மறுபடியும் எம்.எல்.ஏ. ஆகிவிடுவோமோ என பயப்படுகிறார். இனியும் அங்கு இருந்தால் வரக் கூடிய தேர்தலில் எனக்கு டெபாசிட் கூட கிடைக்காது' என வருத்தத்தைக் கூறியிருக்கிறார்.

இதற்குப் பதில் கொடுத்தவர்கள், என்ன வருத்தம் இருந்தாலும் சரியாகிடும். அண்ணன்கிட்ட ஒரு வார்த்தை பேசுங்க எனக் கூறியும் மறுத்துவிட்டாராம்.

` இவ்வளவு கூறியும் செந்தில் பாலாஜி அடம் பிடிக்க என்ன காரணம்?' என சோர்ஸுகள் மூலம் விசாரித்திருக்கிறாராம் தினகரன்.

அப்போது கிடைத்த தகவல்களை அமமுக பொறுப்பாளர்களிடம் கூறியிருக்கிறார். இதைப் பற்றிப் பேசும் பொறுப்பாளர்கள் சிலர், ' செந்தில் பாலாஜி மனமாற்றத்துக்கு இளவரசி மகள் கிருஷ்ணபிரியாவைத்தான் காரணமாக நினைக்கிறார் தினகரன். அமைச்சராக இருந்தபோது கார்டன் தொடர்பான ரகசியங்களை வெளியில் கசியவிட்டவர் செந்தில் பாலாஜி.

அந்த ரகசியம் என்னவென்றால், மதுவிலக்கு தொடர்பாக ஜெயலலிதா முடிவெடுத்தபோது, இந்தத் தகவலை இளவரசியிடம் கூறியிருக்கிறார். அவர் கிருஷ்ணபிரியாவிடம் சொல்லியிருக்கிறார். கிருஷ்ணபிரியா மூலம் செந்தில் பாலாஜிக்குத் தகவல் வந்தது. மறுநாளே மீடியாக்களில் தகவல் பரவியது.

அம்மாவைக் கடுமையாகக் கோபப்பட வைத்த சம்பவம் இது. அதன்பிறகு மந்திரி பதவியில் இருந்தும் தூக்கப்பட்டார் செந்தில் பாலாஜி. கரூரில் எம்.ஆர்.விஜயபாஸ்கரோடு மல்லுக்கட்ட முடியாமல் தான் எங்கள் அணிக்கு வந்தார். அவருக்குப் பதவி போகக் காரணம், அவர் வெளியிட்ட ரகசியங்கள்தான். இப்போதும் எடப்பாடி அண்ட் கோவிடம் செல்வாக்கோடு இருக்கிறது இளவரசி குடும்பம்.

இதே அண்ட் கோ சாராய ஆலை விஷயத்தில் ஸ்டாலினிடமும் நட்பு பாராட்டி வருகிறது. காரணம், நாளை ஆட்சி மாறினால்கூட மிடாஸ் சரக்குகள் விற்பனையாக வேண்டும் என்பதுதான். மிடாஸின் பொறுப்பில் கிருஷ்ணபிரியா கணவர் கார்த்திகேயன் இருந்தாலும் முழு நிர்வாகமும் பிரியா கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. அதனால்தான் செந்தில்பாலாஜியை முன்வைத்து தினகரனுக்கு கலக்கத்தைக் கொடுத்து வருகிறார்' என்கின்றனர்.

- அருள் திலீபன்

More News >>