ராகுலோடு நெருக்கம் காட்டிய ஸ்டாலின் - தூக்கத்தைத் தொலைத்த திருநாவுக்கரசர்

டெல்லியில் சோனியா குடும்பத்துடன் ஸ்டாலின் காட்டிய நெருக்கம், திருநாவுக்கரசருக்குக் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பதவிக்கு வேட்டு வைத்துவிடுவார்களோ எனவும் அவர் பயப்படத் தொடங்கியிருக்கிறாராம். இதனால்தான் என்னை ஆட்டவோ அசைக்கவோ முடியாது என ஆவேசப்பட்டாராம் திருநாவுக்கரசர்.

காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் சோனியா காந்தி, தற்போதைய தலைவர் ராகுல் காந்தி ஆகியோரை ஜன்பத் சாலையில் உள்ள அவர்களது இல்லத்தில் ஸ்டாலின் சந்தித்தார். கடந்த வாரம் நடந்த இந்த சந்திப்பில், சோனியாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறியதுடன், வருகிற 16-ம் தேதி சென்னையில் அறிவாலயம் வளாகத்தில் நடைபெற இருக்கும் கருணாநிதி சிலை திறப்பு விழாவுக்கும் அழைத்தார் ஸ்டாலின்.

அப்போது எடுக்கப்பட்டதாகத் திமுக சார்பில் வெளியான அதிகாரப்பூர்வ புகைப்படங்களில் ஸ்டாலினுடன் கனிமொழி, டி.ஆர்.பாலு, ஆ.ராசா, ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் இருந்தனர். ஆனால், அடுத்த நாள் வெளியிடப்பட்ட படங்களில் சபரீசன் சிரித்துக் கொண்டிருந்தார்.

இந்த ஒரு படம் டெல்லி மீடியாக்களில் பேசப்படும் விஷயமாக மாறியது. 'சபரீசனை டெல்லிக்கு முன் நிறுத்துகிறார் தளபதி' என திமுக பொறுப்பாளர்களும் பேசி வந்தனர்.

டெல்லி சந்திப்பை திருநாவுக்கரசர் தரப்பில் கலக்கத்தோடு பார்க்கிறார்கள்.

இந்த சந்திப்பின்போது, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமையில் மாற்றம் கொண்டு வருவது குறித்தும் விவாதிக்கப்பட்டதாகவும் டிசம்பர் 16 சோனியாவின் சென்னை வருகைக்குப் பிறகு செயல்வடிவம் பெறும் எனவும் பேசத் தொடங்கிவிட்டனர் பீட்டர் அல்போன்ஸ் குரூப்.

திமுகவுடன் கூட்டணி இருக்குமா என்ற சந்தேகம் தொடர்ந்து காங்கிரஸிடம் இருந்து வந்தது. டெல்லி விசிட்டில் காட்டப்பட்ட நெருக்கத்தை திருநாவுக்கரசர் எதிர்பார்க்கவில்லையாம்.

லோக்சபா தேர்தலில் கட்சிக்காரர்களுக்கு சீட் கொடுக்கும் அதிகாரம் தன்னுடைய கையில் இருக்குமா என்ற டவுட்டும் அவருக்கு வந்துள்ளது. இதையெல்லாம் கூட்டிக் கழித்துப் பார்த்து, ஸ்டாலினுடன் ராசியாக பலமுறை முயற்சித்தும் அவரைப் பக்கத்திலேயே சேர்க்கவில்லையாம் ஸ்டாலின்.

-அருள் திலீபன்

More News >>