ஆட்சியை மாற்றிய 5000 ஓட்டுக்கள்! பாஜகவின் ம.பி. கோட்டையில் விழுந்த ஓட்டை!
பாஜகவின் எஃகு கோட்டை என வர்ணிக்கப்பட்ட மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றிருக்கிறது. இந்த வெற்றியை பாஜக தலைமையால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
வழக்கம்போல தேர்தல் தோல்வி குறித்து ஆராயத் தொடங்கியுள்ளது பாஜக.
ஊழல் எதிர்ப்பு இயக்கமான சட்டப் பஞ்சாயத்து இயக்கம், ம.பி தேர்தல் முடிவை அலசி ஆராய்ந்துள்ளது.
இதைப் பற்றி அந்த அமைப்பின் மூத்த நிர்வாகி செந்தில் ஆறுமுகம் கூறியிருப்பதாவது:
24 மணிநேர இழுபறிக்குப் பின்னர் மத்திய பிரதேச இறுதி முடிவு வெளியாகியுள்ளது (காங்: 114 ; பா.ஜ.க:109; சமாஜ்வாதி:1 பகுஜன் சமாஜ்: 2; சுயேச்சைகள்: 4).
மத்திய பிரதேசத்தில் 230 தொகுதிகளில் 7 தொகுதிகளின் முடிவு கவனத்துக்குரியது. இதில் 1000 வாக்குகளுக்குக் குறைவான வித்தியாசத்தில் காங்கிரஸ் வெற்றிபெற்றுள்ளது.
( 1.சுவஸ்ரா - 350 2. ராஜ்நகர் -732 3.ராஜ்பூர்-932; 4.வடக்கு ஜெபல்பூர்:578 ; 5.தமோ:798 ; 6.பியாரா:826 7.தெற்கு குவாலியர்:121). அதாவது, இந்த 7 தொகுதிகளின் மொத்த வாக்கு வித்தியாசமான 4337 வாக்குகளை பா.ஜ.க. பெற்றிருந்தால் பா.ஜ.கவிற்கு கூடுதலாக 7 தொகுதிகள் கிடைத்திருக்கும். அதாவது, 116 தொகுதிகளில் வென்றிருக்கும்.
ஆட்சி அமைக்கத் தேவையான தொகுதிகள் 116 என்பது குறிப்பிடத்தக்கது. (1000க்குக் குறைவான வாக்கு வித்தியாசத்தில் 2 தொகுதிகளில் பாஜக வெற்றிபெற்றுள்ளது என்பதையும் கவனத்தில் கொள்வோம்).
5 கோடி வாக்காளர்களில் 5000 பேரின் வாக்குகளை, குறிப்பிட்ட தொகுதிகளில் பெறமுடியாததால் ஒரு ஆளுங்கட்சி ஆட்சி இழக்கிறது. எதிர்க்கட்சி ஆட்சி அமைக்கிறது.
ஓட்டுக்கு ரூ.5000, ரூ.10000 விலைபேசப்படுவதற்கு மூலகாரணங்களில் ஒன்று இங்கேதான் இருக்கிறது. சில ஆயிரம் ஓட்டுக்களில் ஆட்சியை இழப்பதைவிட பல ஆயிரங்கள் கொடுத்து வாக்குகளை விலைக்கு வாங்கி வெற்றிபெறுவதையே மிகப்பெரும்பாலான கட்சிகள் விரும்புகின்றன. வெற்றிக்கு ஒரு ஓட்டு கூடுதலாகக் கிடைத்தால் போதும் என்றுள்ள நமது தேர்தல் முறையில் (FPTP-First Past The Post) மாற்றம் தேவை என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
அதேபோல், வாக்கு சதவிகிதத்தை ஆராய்ந்து பார்த்தால் ஆட்சியை இழந்த பா.ஜ.க பெற்ற வாக்கு சதவிகிதம்: 41%, ஆட்சி அமைக்கும் காங்கிரஸ் பெற்ற வாக்குசதவிகிதம்: 40.9% என்ற அளவில் இருக்கிறது. ஆம், காங்கிரசை விட பா.ஜ.க. 0.1% ஓட்டுக்கள் கூடுதலாகப் பெற்றுள்ளது.
0.1% கூடுதல் வாக்குபெற்ற கட்சி ஆட்சியை இழப்பது நம் ஜனநாயகத்தின் வினோதப் போக்குகளில் ஒன்று. இதுவாவது பரவாயில்லை, இரண்டு பிரதான கட்சிகளும் கணிசமான தொகுதிகளைக் கைப்பற்றியுள்ளன. ஏராளமான வாக்குகள் வாங்கியும், அதற்கு இணையான தொகுதிகள் சம்பந்தப்பட்ட கட்சிகளுக்குக் கிடைக்காமல் போன தேர்தல்கள் பலவற்றைப் பார்த்துள்ளோம். இவற்றுக்கெல்லாம் தீர்வு என்ன என்றால், என் ஓட்டு வீணாகக்கூடாது; ஜெயிக்கற கட்சிக்குத்தான் ஓட்டுப்போடுவேன் என்ற மக்கள் மனநிலை மாறவேண்டும் என்றால், தேர்தல் முறையில் மாற்றம் வேண்டும்' எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
- அருள் திலீபன்