தினகரனுக்கு குட்பை...திமுகவில் செந்தில் பாலாஜி- கன்பார்ம் செய்யும் போட்டோ!

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தினகரன் அணியில் இருந்து விலகி திமுகவில் சேருவதை உறுதி செய்யும் படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

தினகரனுடன் தொடர்ந்து பயணித்தால் அரசியல் எதிர்காலம் சூனியமாகிவிடும் என்பது செந்தில் பாலாஜியின் எண்ணம். இதனால் திமுகவில் இணைவது என முடிவெடுத்தார்.

மேலும் தினகரனின் அத்தனை சமாதான முயற்சிகளையும் செந்தில் பாலாஜி நிராகரித்துவிட்டார். தற்போது செந்தில் பாலாஜி என்று திமுகவில் அதிகாரப்பூர்வமாக இணைகிறார்? என்பது குறித்துதான் விவாதம்.

திமுகவின் ஒரு தரப்பு நாளையே செந்தில் பாலாஜி திமுகவில் இணைவார் என்கிறது. மற்றொரு தரப்பு டிசம்பர் 16-க்குப் பின்னர்தான் பிரமாண்டாமாக நடைபெறும் என்கிறது.

இந்நிலையில் செந்தில் பாலாஜி, திமுகவில் இணைவதை உறுதி செய்யும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சென்னை விமான நிலையத்தில் முன்னாள் மத்திய அமைச்சரும் திமுகவின் கொள்கை பரப்பு செயலாளருமான ஆ. ராசாவும் செந்தில் பாலாஜியும் இயல்பாக பேசிக் கொண்டு, வெளியே வருகின்றனர்.

ஆ.ராசாவிடம் செந்தில் பாலாஜி ஒருவித பவ்யத்தையும் வெளிப்படுத்துகிறார். இப்படத்தை முன்வைத்தும் சமூக வலைதளங்களில் விவாதங்கள் நடைபெறுகின்றன.

 

More News >>