ஏ.ஆர். முருகதாஸ் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!
சர்கார் விவகாரம் தொடர்பாக இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடித்த சர்கார் படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியிருந்தார். படத்தில் அரசின் இலவச பொருட்களை நெருப்பில் எறிவது போன்ற காட்சிகள் இடம்பிடித்தன. மேலும், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் இயற்பெயர் எனப்படும் கோமளவல்லி பெயரை படத்தின் வில்லி வரலட்சுமி சரத்குமாருக்கு சூட்டியிருந்தனர்.
இதனால், படத்திற்கு அதிமுக அரசு எதிர்ப்பு தெரிவித்தது. அதிமுகவினர் எதிர்ப்பை தொடர்ந்து அந்த காட்சிகள் மறு தணிக்கை செய்யப்பட்டு நீக்கப்பட்டன.
இருந்தாலும், ஏ.ஆர். முருகதாஸ் அதிமுக அரசிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும் என்றும், இனி வருங்காலத்தில் அதிமுக அரசை விமர்சித்து காட்சிகள் வைக்கக்கூடாது எனவும் உத்தரவிட்டனர்.
ஆனால், இதனை ஏற்க முடியாது என முருகதாஸ் மறுத்தார். இதனை தொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் அவர் மீது மூன்று பிரிவுகளில் வழக்கு தொடர்ந்தனர்.
இதனை எதிர்த்து முருகதாஸ் தரப்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள், இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசின் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஆஜராகவுள்ளதால், இந்த வழக்கை விசாரிக்க கால அவகாசம் கேட்டுள்ளது தமிழக அரசு.
இதனால், முருகதாஸ் கைது செய்யப்படமாட்டார் என்பது தெளிவாகியுள்ளது.