மீண்டும் டூப்ளிகேட் ஜெயலலிதா அவதாரம் எடுத்த இளவரசி மகள் கிருஷ்ணப்பிரியா
தன்னை மீண்டும் ஜெயலலிதாவின் மறு உருவமாகக் காட்டிக் கொள்ளத் தொடங்கியிருக்கிறார் இளவரசியின் மூத்த மகள் கிருஷ்ணபிரியா. அவரது புதிய கெட்டப்புக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிகின்றன.
ஜெயலலிதாவோடு முப்பது ஆண்டுகாலம் போயஸ் தோட்டத்தில் வசித்தவர் சசிகலா. அவரைப் போலவே ஜெ.வின் விசுவாசியாக இருந்தவர் இளவரசி.
கார்டனை விட்டு சசிகலா துரத்தப்பட்ட நாட்களில்கூட, இளவரசி மீது ஜெ.வுக்கு சந்தேகம் எழவில்லை. இப்போதும் இளவரசியின் ரேஷன் கார்டு, கார்டன் முகவரியில்தான் இருக்கிறது.
இந்த அறிமுகத்தை வைத்துக் கொண்டே ஆட்சிக்கு எதிராகவும் தினகரனுக்கு எதிராகவும் வாள்வீசி வருகிறார். சென்னை கிரீம்ஸ் ரோட்டில் கிருஷ்ணபிரியா ஃபவுண்டேஷன் என்ற பெயரில் தொண்டு நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறார்.
இதுதவிர, சுற்றுச்சூழல் விவகாரங்களில் தலையிடுவது, கஜா புயலுக்கு நிவாரண உதவிகளை அனுப்புவது என மேடம் ரொம்பவே பிஸியாக இருக்கிறார். இடையில் அவ்வப்போது பரப்பன அக்ரகாரா சிறைக்குப் போய் தாய் இளவரசியைப் பார்த்து வருவது தொழில்களை கவனிப்பது என நிற்க நேரம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறார்.
ஆர்கேநகர் தேர்தல் சமயத்தில் வெற்றிவேல் வெளியிட்ட வீடியோ மூலம், தினகரனோடு நேரடியாக சண்டை போடத் தொடங்கினார் கிருஷ்ணா. இன்று வரையில் தினகரனை அவர் தீய சக்தியாகத்தான் பார்க்கிறார்.
அவரைப் பற்றிக் கேட்டாலே, பத்து வருடமாகக் கட்சியில் இல்லாமல் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தாரே அவரா?' என வஞ்சப்புகழ்ச்சி பேசினார். கருணாநிதிக்கு சமாதியில் இடம் கொடுக்காதபோது, அம்மா இருந்திருந்தால் கருணாநிதிக்கு இடம் கொடுத்திருப்பார். அவரை அரசியல்வாதியாகப் பார்த்தவர்களுக்கு இது தெரிய வாய்ப்பில்லை' எனவும் ஷாக் ட்ரீட்மெண்ட் கொடுத்தார் கிருஷ்ணப்பிரியா.
ஜெயலலிதா மறைந்த காலத்தில் அவரைப் போலவே ஆடை, கண்ணாடி அணிந்து போஸ் கொடுத்தவர், விமர்சனம் வந்ததால் கொஞ்சம் ஒதுங்கியிருந்தார். தற்போது மீண்டும் அரசியல்வாதி லுக்குக்கு மாறியிருக்கிறார். இதைப் படமாகவும் முகநூலில் வெளியிட்டுள்ளார். இதைப் பார்த்த அவரது விசிறி ஒருவர், ' ஜெயலலிதா வேறு எங்கேயும் இல்லை' எனப் புகழ்ந்திருக்கிறார்.
- அருள் திலீபன்