ஆன்லைனில் சீன பொருள்கள் வாங்குவதற்கு தடை வருமா?

இந்தியாவிலிருந்து சீன பொருள்களை இணையதளம் மற்றும் செயலிகள் மூலம் வாங்குவதற்கு கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

சீன மின்னணுமுறை வர்த்தகர்கள் (etailers), தங்களிடம் வாங்கப்படும் பொருள்களை 'வெகுமதி' (gifts) என்று குறிப்பிட்டு, அதை நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு அனுப்பி வைக்கின்றனர். 'வெகுமதி' என்ற போர்வையில் பெரும் எண்ணிக்கையில் சீன பொருள்கள் இந்தியாவுக்குள் வந்து கொண்டிருக்கின்றன. ஐந்தாயிரம் ரூபாய்க்குள் விலையுள்ள வெகுமதி பொருள்களுக்கு 'தனிப்பட்ட பயன்பாட்டுக்காக' என்ற வகைப்படி, தற்போதைய விதிகளின் அடிப்படையில் சுங்கவரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

சீன மின்னணுமுறை வர்த்த நிறுவனங்களான கிளப் பேக்டரி, அலிஎக்ஸ்பிரஸ் மற்றும் ஷீய்ன் (Shein) ஆகியவை இந்த சுங்க வரி விலக்கினை முறையற்ற வகையில் பயன்படுத்துவதாக இந்திய தொழில்துறையிலிருந்து அரசுக்கு புகார்கள் சென்றுள்ளன. உதாரணத்திற்கு, கடந்த செப்டம்பர் மாத கணக்குப்படி, கிளப் பேக்டரி வர்த்தக நிறுவனத்திற்கு உலகமெங்கும் உள்ள மொத்த வாடிக்கையாளர்கள் 7 கோடி பேர். அதில் இந்தியாவில் மட்டும் 4 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர். ஷீய்ன் என்னும் நிறுவனம் பெண்களுக்கான மேற்கத்திய பாணி அலங்கார (fashion) பொருள்களை விற்கக்கூடியது. ஓராண்டு காலத்திற்குள் இந்நிறுவனம் 10 லட்சத்திற்குள் மேற்பட்ட பயனர்களை பெற்றுள்ளது. நாளொன்றுக்கு பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட ஆர்டர்கள் இந்நிறுவனத்திற்கு குவிகின்றன.

2017 - 18ம் ஆண்டில் இந்தியா 33 பில்லியன் டாலருக்கு சீனாவுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. அதேவேளையில் இருமடங்குக்குகும் அதிகமாக அதாவது 76.2 பில்லியன் டாலருக்கு சீனாவிலிருந்து சரக்குகளை இறக்குமதி செய்துள்ளது. ஆகவே, மத்திய தொழிற்கொள்கை மற்றும் ஊக்குவிப்புத் துறை (DIPP) சீன மின்னணுமுறை வர்த்தக நிறுவனங்களிடமிருந்து ஆண்டொன்று ஒரு இந்திய வாடிக்கையாளர் நான்கு பொருள்களை மட்டுமே வாங்கலாம் என்ற கட்டுப்பாடு விதிக்க முடியுமா என்று ஆராய்ந்து வருகிறதாக கூறப்படுகிறது.

சீனாவிலிருந்து நேரடியாக வாடிக்கையாளர்களுக்கே கூரியர் அல்லது அஞ்சல் மூலம் பொருள்கள் அனுப்பி வைக்கப்படுவதால் சுங்க இலாகா, ரிசர்வ் வங்கி மற்றும் இந்திய அஞ்சல் துறை ஆகியவற்றை ஒருங்கிணைத்து கண்காணிப்பதன் மூலமே இவ்வகை வர்த்தகத்தை கட்டுப்பாட்டுக்குள் வைக்க முடியும் என்றும் கருதப்படுகிறது.

More News >>