ரசிகர்களின் வாழ்த்தா முக்கியம்? அம்பானி வீட்டு கல்யாணம்தானே அவசியம்.. ஏனுங்க மிஸ்டர் ரஜினிகாந்த்?
டிசம்பர் 12... ஒவ்வொரு ரஜினிகாந்த் ரசிகனும் தவமாய் தவமிருந்து கொண்டாடுகிற திருநாள்... அந்த ரசிகனின் உயிரான தலைவனின் பிறந்த நாள்..
40 ஆண்டுகாலமாக ரஜினிகாந்தை வாழ வைத்துக் கொண்டிருக்கும் தெய்வங்கள் ரசிகர்கள். பிறந்த நாளன்று தலைவனை நேரில் சந்திப்பது அந்த ரசிகனுக்கு திருவிழாதான்.
ஆனால் இந்த ஆண்டு தாம் சென்னையில் இல்லை என தெரிவித்துவிட்டு ரஜினிகாந்த் நேற்று மும்பை சென்றுவிட்டார். என்னதான் நாம் தெரிவித்திருந்தாலும் நம் பிறந்த நாளன்று நம் வீடு முன்பாக ரசிகர்கள் காத்திருப்பார்கள் என்பது ரஜினிக்கு தெரியாத ஒன்றல்ல.
இருந்தபோதும் ரஜினி மும்பைக்கு சென்றிருக்கிறார். மும்பையில் முகேஷ் அம்பானி இல்லத் திருமணத்தில் பங்கேற்கத்தான் நேற்றே கிளம்பிவிட்டார் ரஜினிகாந்த்.
இதுதெரியாத ஏமாளி ரசிகர் கூட்டம் ரஜினி வீடு முன்பாக தவம் கிடக்கிறது. ஆம் ரஜினிக்கு ரசிகர் வாழ்த்தா முக்கியம்? அம்பானிகளின் நட்பல்லவா அவசியம்!