பத்மாவத் திரைப்படம் எங்கள் மாநிலத்தில் திரையிடப்படாது - முதல்வர் அதிரடி
குஜராத் மாநிலத்தில் பத்மாவத் திரைப்படம் திரையிடபடாது என்று அம்மாநில முதல்வர் விஜய் ரூபானி தெரிவித்துள்ளார்.
சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில், தீபிகா படுகோனே உள்ளிட்டோரின் நடிப்பில், ரூ.190 கோடி செலவில் ‘பத்மாவதி’ திரைப்படம் உருவாக்கப்பட்டு உள்ளது. 13-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சித்தூர் ராணி பத்மினியின் வாழ்க்கை வரலாற்றுச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட படமாகும்.
இந்நிலையில், ‘பத்மாவதி’ திரைப்படம் ராஜபுத்திர வம்ச மக்களை இழிவுபடுத்தும் விதமாக உள்ளது என்று கூறி, சங்-பரிவார அமைப்புக்களும், ராஜபுத்திர வம்சத்தைச் சேர்ந்த அமைப்புக்களும் பிரச்சனையைக் கிளப்பி வருகின்றன.
படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்ற அவர்களின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்து விட்டது. தொடர்ந்து நீண்ட போராட்டத்துக்குப் பின் படத்துக்கு U/A சான்றிதழ் கிடைத்துள்ளது.
படத்தின் பெயரை ‘பத்மாவத்’ என்று மாற்றி படத்தில் இருந்து எந்தக் காட்சிகளும் நீக்கப்படாமல் வரும் 25ஆம் தேதி படம் ரிலீஸ் ஆகிறது. ரிலீஸ் தேதி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்ட சில நிமிடங்களில், ராஜஸ்தான் அரசு பத்மாவத் படத்தைத் திரையிட தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் பத்மாவத் திரைப்படம் திரையிட அனுமதி இல்லை என்று குஜராத் முதல்வர் விஜய் ரூபாணி கூறியுள்ளார்.