ஸ்டாலினின் செந்தில் பாலாஜி ஆபரேஷன் அம்போவா? ஆதரவாளர்களை அலேக்காக அள்ளியது அதிமுக!

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை திமுக வளைத்துப் போட அக்கட்சி தொண்டர்கள் உற்சாகமடைந்துவிட்டனர். ஆனால் தற்போது செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் அதிமுக நோக்கி போவதால் திமுக தரப்பு அதிர்ந்து போயுள்ளது.

ஜெயலலிதா மறைந்த போதே அதிமுகவினர் திமுகவுக்கு தாவக் கூடும் என கூறப்பட்டது. எம்.எல்.ஏக்கள் கட்சி மாறுவார்கள்; ஆட்சி கவிழும் எனவும் கூறப்பட்டது.

ஆனால் எதுவுமே நடைபெறவில்லை; திமுக தலைவர் ஸ்டாலினே, மக்கள் என்னிடம் நிறைய எதிர்பார்க்கிறார்கள்; கொல்லைப்புறமாக ஆட்சிக்கு நாங்கள் வரமாட்டோம் என்றெல்லாம் கூறியிருந்தார்.

தற்போது திமுக தலைவராகிவிட்ட நிலையில் தினகரன் தரப்பு பிரமுகர்களை வளைத்துப் போடுவதில் முனைப்பு காட்டியது ஸ்டாலின் தரப்பு. இதில் முதல் விக்கெட்தான் செந்தில் பாலாஜி.

கொங்கு மண்டலத்தில் சோர்ந்து கிடக்கும் திமுகவுக்கு செந்தில் பாலாஜி வரவு உற்சாகத்தை தந்துள்ளது. தமது ஆதரவாளர்களை அப்படியே திமுகவில் கொண்டு சேர்த்து அக்கட்சியை பலப்படுத்துவார் என கருதப்பட்டது.

ஆனால் செந்தில் பாலாஜி எவ்வளவோ பேசிப் பார்த்தும் அவரது ஆதரவாளர்கள் கூண்டோடு அதிமுகவுக்கு திரும்பிவிட்டனர். திமுகவுக்கு நாங்கள் வந்தால் அரசியல் எதிர்காலமே இருக்காது; எங்களுக்காக நீங்களும் ஒரு கட்டத்துக்கு மேல பேச முடியாது... நீங்க உங்க ரூட்ல போங்க... நாங்க எங்க பிழைப்பை பார்க்கிறோம் என அமைச்சர் விஜயபாஸ்கர் முன்னிலையில் அணி அணியாக ஐக்கியமாகிவிட்டனர்.

கரூரில் நடைபெற்று வரும் நிகழ்வுகள் திமுக தலைமையை அதிர வைத்துள்ளது. ஆதரவாளர்களை அள்ளிக் கொண்டு இணைவார் என எதிர்பார்த்தால் ‘சிங்கிளாக’த்தான் வருவார் போல என்கிற விரக்தியும் திமுக தரப்பில் வெளிப்படுகிறது.

தினகரன் தரப்பு பிரமுகர்களை வளைக்கும் ஸ்டாலினின் ஆபரேஷனுக்கு இது பின்னடைவாக இருக்கப் போகிறது என எச்சரிக்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

More News >>