கண்ணை மூடிக்கொண்டு கண்ட ஆப்களையும் இன்ஸ்டால் செய்கிறீர்களா?

இந்தியர்கள் 5 முதல் 207 வரை எண்ணிக்கையிலான செயலிகளை தங்கள் ஸ்மார்ட்போன்களில் நிறுவுறுகிறார்கள் என்றும், சராசரியாக ஒவ்வொரு இந்தியரும் 51 செயலிகளை தரவிறக்கம் செய்து கொண்டாலும் அதிகபட்சமாக 24 செயலிகளை பயன்படுத்துகின்றனர் என்றும் ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது.

டெக்ஏஆர்சி என்ற தொழில்நுட்ப ஆலோசனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் இந்தியர்களின் செயலி மோகம் வெளிப்பட்டுள்ளது. என்ன ஏதென்றே புரிந்து கொள்ளாமல் பல செயலிகள் நிறுவப்படுகிறதென்று கூறும் ஆய்வாளர்கள், அதிக எண்ணிக்கையில் செயலிகளை ஸ்மார்ட்போன்களில் நிறுவுவது போன்களின் செயல்திறனை பாதிப்பதோடு, பயனர்களின் தகவல்கள் ஆபத்தான நபர்களிடம் போய் சேரவும் வழிவகுக்கும் என்று எச்சரிக்கின்றனர்.

இந்தியாவில் 76 சதவீத பயனர்கள் சமூக ஊடக செயலிகளையும் 70 சதவீதத்தினர் கேம் என்னும் விளையாட்டு செயலிகளையும், 50 சதவீதத்தினர் பணபரிவர்த்தனைக்கான செயலிகளையும், 40 சதவீதத்தினர் தொலைக்காட்சி, ஒளிக்கோவை போன்ற டி.வி. மற்றும் வீடியோ செயலிகளையும் பயன்படுத்துகின்றனர் என்று அந்த ஆய்வு தெரிவிக்கின்றது.

அமெரிக்காவில் நியூயார்க் டைம்ஸ் என்ற செய்தி நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில், பயனர்கள் பற்றிய பல்வேறு தகவல்கள் செயலிகள் மூலம் விளம்பர மற்றும் வியாபார நிறுவனங்களோடு பகிர்ந்து கொள்ளப்படுவதாக அல்லது அவற்றுக்கு விற்கப்படுவதாக தெரிய வந்துள்ளது.

ஒரு குறிப்பிட்ட நபரது நடமாட்டம் ஒருநாளுக்கு 14,000 முறை பதிவு செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை அளித்துள்ளது. டிராபிக் என்னும் போக்குவரத்து மற்றும் வழியை தெரிந்து கொள்வதற்காக தான் இருக்குமிடத்தை அறிந்து கொள்ளுவதற்கு செயலிக்கு ஒருவர் அனுமதி கொடுத்தால், அவர் எந்த நாளில் எந்த இடத்தில் எவ்வளவு நேரம் இருந்துள்ளார் என்பதை பற்றிய தகவல் செயலி மூலமாக வேறு நபருக்குச் செல்லக்கூடிய வாய்ப்பு உள்ளது.

இன்றைய வியாபார நிறுவனங்கள் பெருமளவில் இதுபோன்ற தகவல்களை கொண்டே தங்கள் விளம்பரங்களை கொடுக்கின்றனர். போட்டி நிறுவனத்தின் வாடிக்கையாளர் என்ன செய்கிறார்? எங்கெங்கு செல்கிறார்? என்பதையும் தங்கள் வணிகநோக்க ஆய்வுக்காக நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன என்பதும் தெரிய வந்துள்ளது.செயலிகளை இன்ஸ்டால் செய்யும் முன்னர் இது கண்டிப்பாக நமக்கும் தேவையா என்று ஒருமுறை யோசித்துப் பார்ப்போம்; தேவையானபோது மட்டும் உரிய எச்சரிக்கையுடன் இவற்றை பயன்படுத்துவது நல்லது.

More News >>