கிரண்பேடி கண்களுக்கு இது தெரியவில்லையா?! - பதற்றப்பட வைத்த பாப்பாஞ்சாவடி பள்ளி

தூய்மை இந்தியா திட்டத்தின் ஓர் அங்கமாக புதுச்சேரி மாநிலத்தை தூய்மைப்படுத்தி வருகிறார் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி. மாநிலத்தில் உள்ள அரசுப் பள்ளிகள் பலவும் புதர் மண்டி, சாக்கடை நிறைந்து ஓடுவதாகக் குற்றம் சாட்டுகின்றனர் கல்வியாளர்கள்.

புதுச்சேரி, கதிர்காமத்தில் கானகம் ஏரியைத் தூய்மைப்படுத்தும் பணியைத் தொடர்ந்து ஆய்வு செய்து வந்தார் கிரண்பேடி. இந்தப் பணிகளை நிறைவு செய்த பிறகு அங்கு படகுப் போக்குவரத்து தொடங்கப்பட்டது. இதன்பிறகு, உழவர்கரை தொகுதியில் ஆய்வு மேற்கொள்ள சென்ற ஆளுநர் கிரண்பேடிக்கு, அந்த தொகுதி எம்எல்ஏ பாலன் கடும் எதிர்ப்பு தெரிவித்து அவரை தடுத்து நிறுத்தியுள்ளார். இதனால், பரபரப்பு நிலவியதையடுத்து, ஆளுநர் கிரண்பேடி அங்கிருந்து வெளியேறினார். இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஆளுநர் கிரண்பேடி, புதுச்சேரியை தூய்மைப்படுத்தும் தனது பணி தொடரும்.

எம்எல்ஏக்கள் எதிர்ப்பு வழக்கமான ஒன்று தான், இதனை தான் பெரிதுபடுத்த விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார். மாநில அரசுக்கும் துணைநிலை ஆளுநருக்கும் இடையே நடந்து வரும் அதிகாரப் போட்டியை டெல்லியில் உள்ளவர்களும் பெரிதும் ரசிக்கிறார்கள். மக்களால் தேர்வு செய்யப்பட்ட மாநில அரசின் அனைத்து அதிகாரங்களிலும் தன்னுடைய செல்வாக்கைக் காட்டி வருகிறார் கிரண்பேடி. அவரது கவனத்துக்கு சில புகைப்படங்களை அனுப்பியுள்ளனர் கல்வியாளர்கள்.

வில்லியனூர், ஒட்டம்பாளையம் சாலையில் உள்ள பாப்பாஞ்சாவடி அரசு தொடக்கப் பள்ளியின் அவல நிலைகளை விளக்குகிறது அந்தப் புகைப்படங்கள். கழிப்பறை முதற்கொண்டு பள்ளிக் கட்டடம் முழுவதையும் சாக்கடை நீர் ஆக்ரமித்திருக்கிறது.

பாத்ரூமுக்குள் குழந்தைகள் நுழைய முடியாதபடி இருப்பதால் திறந்த வெளியிலேயே சிறுநீர் கழிக்கின்றனர். இதனை சரிசெய்ய வேண்டிய அதிகாரிகளும் கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர். 'தூய்மை இந்தியா என முழங்கும் நீங்கள் பாப்பாஞ்சாவடி பள்ளிக்குள் முதலில் கால் வையுங்கள்' என கிரண்பேடிக்குத் தகவல் அனுப்பியுள்ளனர்.

More News >>