தினகரன் கோஷ்டியில் இருந்து எம்.எல்.ஏ. பிரபு எஸ்கேப்- முதல்வர் எடப்பாடியுடன் நாளை சந்திப்பு
செந்தில் பாலாஜியை தொடர்ந்து தினகரன் கோஷ்டியில் இருந்து கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பிரபுவும் தப்பி ஓடுகிறார். முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நாளை எம்.எல்.ஏ. பிரபு சந்திக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற தினகரன் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என தனிக்கட்சி தொடங்கினார். அதே நேரத்தில் கட்சியின் அத்தனை செலவுகளையும் தம்மை ஆதரிக்கும் பிரமுகர்கள் தலையில் கட்டினார்.
இத்தனைக்கும் அரபு நாடு ஒன்றில் இருந்து ஹவாலா மூலம் கொண்டு வரப்பட்ட பல நூறு கோடி ரூபாயை வெளியே எடுக்கவில்லை தினகரன். இதனால் அந்த கட்சியின் பசையுள்ள பிரமுகர்கள் வெறுத்துப் போயினர்.
இதன் முதல் கட்டமாகத்தான் தினகரனின் நம்பிக்கைக்குரிய செந்தில் பாலாஜி, திமுகவில் இணைகிறார், அதேபோல பழனியப்பனும் திமுகவுக்கு போகிறார்; அதிமுகவுக்கு திரும்புகிறார் என தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பிரபு, தினகரன் முகாமில் இருந்து தப்பி முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவிக்க இருக்கிறாராம். முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நாளை கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பிரபு சந்திக்க உள்ளதாக கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட தினகரன் ஆதரவு தலித் எம்.எல்.ஏக்களுக்கும் முதல்வர் எடப்பாடி தரப்பு குறி வைத்திருக்கிறதாம். இதனால் ஒட்டுமொத்தமாக தினகரன் கூடாரமே காலியாவது உறுதி என கூறப்படுகிறது.