கங்குலி ஒரு தீர்க்கதரிசி!
அன்று பிட்ச்சின் தன்மையை மாற்றியதற்காக, அன்று கங்குலியை விமர்சனம் செய்த கிரிக்கெட் ஆய்வாளர்களுக்கு இப்போது புரிந்திருக்கும்.
கேப்டவுனில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் 208 ரன் என்ற எளிதான இலக்கை அடைய முடியாமல், இந்திய அணி 135 ரன்களில் சரண்டர் ஆனது, 72 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.
கடந்த 2017-ல் முழுக்க முழுக்க இந்தியா மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் மட்டுமே விளையாடி, வெற்றி மேல் வெற்றிகளையும், பற்பல சாதனைகளையும் புரிந்து, உள்ளூர் சண்டியர்களாக வலம் வந்தது இந்திய அணி.
இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்திய துணை கண்டத்திற்கு வெளியே நடைபெறும் முதல் போட்டி என்பதால், ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் தென் ஆப்பிரிக்க தொடரையும், அதன் முதல் போட்டியின் முடிவையும் காண மிகவும் ஆர்வமாக இருந்தார்கள்.
போட்டிக்கு முன்பே தோல்வி அடையும் என்று, நான் உள்பட பல கிரிக்கெட் ஆய்வாளர்கள் கணித்திருந்தாலும், இந்திய அணி இந்த அளவுக்கு மோசமான தோல்வியடையும் என டூபிளிஸ்ஸிஸ் கூட கணித்திருக்க மாட்டார்.
முதல் டெஸ்ட்டில் இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர், தென் ஆப்பிரிக்க மண்ணில் எல்லா விதத்திலும் தோற்றுவிட்டது. அதுபோல், பெவிலியன் திரும்புவதில் தென் ஆப்பிரிக்க அணி வீரர்களும் இந்திய வீரர்களுக்கு கடும் போட்டியாக இருந்தனர் என்பதையும் மறுக்க முடியாது.
இந்திய வீரர்களுக்கு தான் அந்த ஆடுகளம் கோணலாக இருந்தது என்றால், அந்த அணியினருக்கு அல்வா சாப்பிடுவது போன்று தானே இருந்திருக்க வேண்டும். அல்வாவை ரசித்து, ருசித்து சாப்பிட விடாமல் செய்த, இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஒரு சபாஷ் சொல்லியே ஆக வேண்டும்,
அப்படி ஒரு சிறப்பான பந்துவீச்சு. உள்ளூர் பேட்ஸ்மேன்களை ஒன்றை இலக்குகளில் அனுப்புவது என்பது அவ்வளவு சுலபமான விஷயம் அல்ல. தன் பணியை கச்சிதமாக செய்து முடித்தவர்கள் நமது பந்துவீச்சாளர்கள் மட்டுமே...
எதிரணியின் பந்துவீச்சாளர்களை விட இவர்கள் எல்லா விதத்திலும் வென்றிருந்தார்கள். பயிற்சி நேரத்தில் கொஞ்ச நேரம் பேட்டிங்கும் பழகியிருந்தால், இன்று இந்தியா 1-0 என்ற விகிதத்தில் முன்னிலை பெற்றிருக்கும்.
தென் ஆப்பிரிக்க மைதானங்கள் வேகப்பந்து வீச்சுக்கு உகந்தது என்பதால், இந்த போட்டிக்கான முதல் வெள்ளோட்டத்தை அன்றே தனது சொந்த ஊர் மைதானத்தில் நடைமுறைப்படுத்தி இருந்தார் தாதா கங்குலி.
இலங்கைக்கு எதிரான அந்த முதல் டெஸ்ட் போட்டிக்காக, கேப்டவுன் பிட்ச்சை அப்படியே பெயர்த்து எடுத்து வந்து, கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் பதித்திருந்தார்.
அதுவரை சுழலுக்கு மட்டுமே பழக்கப்பட்டிருந்த இந்திய பேட்ஸ்மேன்களின் பேட்டிங் திறமைக்கு, அன்றே வேகப்பந்து பரிசோதனை செய்து பார்த்தார் சவ்ரவ் கங்குலி. அவர் நினைத்தது போலவே ரிசல்ட்டும் வந்தது,
முதல் இன்னிங்ஸில் சுரங்கா லக்மலின் வேகத்தில் ஆட்டம் கண்டது இந்திய அணி. தோற்க வேண்டிய போட்டி அது. ஆனால் இரண்டாவது இன்னிங்ஸில் "லக்மலுக்கே இந்த மண்ணுல விக்கெட் விழுந்தா... எங்களுக்கு விழாதா என்ன.?" என ஆக்ரோஷத்தில் பந்துவீசிய புவனேஸ்வர் குமாரின் கைக்குள் இலங்கை சரணடைந்து போட்டியும் டிராவானது.
அன்றும் விக்கெட் மழை, இன்றும் விக்கெட் மழை, தென் ஆப்பிரிக்காவில் வான்மழை இல்லையென்றால் ஆட்டம் மூன்றாவது நாளே முடிந்திருக்கும். அன்று கொல்கத்தாவில் மழை பெய்யாமல் இருந்திருந்தால் இந்தியா வென்றிருக்கும்,
இந்த தென் ஆப்பிரிக்க போட்டி, அன்றைய கொல்கத்தா போட்டியை கண் முன்னே காட்டி சென்றாலும், தோல்வி அடைந்தது நிச்சயம் வருத்தமே.! இருந்தாலும், ஆடுகளத்தின் தன்மைக்கேற்ப தன்னை மாற்றிக்கொள்பவர்கள் தானே வெற்றி பெறுவார்கள்.
அன்று பிட்ச்சின் தன்மையை மாற்றியதற்காக, அன்று கங்குலியை விமர்சனம் செய்த கிரிக்கெட் ஆய்வாளர்களுக்கு இப்போது புரிந்திருக்கும், அந்த பரிசோதனை முயற்சியின் முக்கியத்துவம்.
கொல்கத்தா மைதானத்தில், அன்றே தென் ஆப்பிரிக்க போட்டிக்கு தீர்க்க தரிசனம் வழங்கிய தாதா கங்குலி இந்திய அணி பேட்டிங் தேர்வை கடுமையாகவும் வெளிப்படையாகவும் விமர்சித்துள்ளார்.
இந்திய அணியின் மோசமான பேட்டிங் குறித்து இன்று அவர் அவர் கூறியதாவது:-
இந்திய வீரர்கள் ரோகித் சர்மாவும், ஷிகர் தவானும் உள்நாட்டில் சிறப்பான வகையில் விளையாடி இருக்கிறார்கள். ஆனால் வெளிநாட்டு மண்ணில் நன்றாக விளையாடியதில்லை. வெளிநாட்டில் அவர்களது செயல்பாடு அதற்கு நேர்மாறாக உள்ளது.
அவர்களது சாதனை விவரங்களை எடுத்து பார்த்தால் புரியும். ஆடிய லெவன் அணியை பொருத்தவரை, வெளிநாட்டு தட்பவெப்ப நிலைக்கு ஏற்றார்போல் சிறப்பாக விளையாடக்கூடிய விராட் கோலி, முரளி விஜய் ஆகியோரையே நாம் அதிகமாக நம்பி இருக்கிறோம்.
புஜாராவை எடுத்துக் கொண்டால் அவர் அடித்த 14 சதங்களில் 13 சதங்கள் இந்திய துணை கண்டத்தில் அடிக்கப்பட்டதாகும். அதே நேரத்தில் லோகேஷ் ராகுல், ஆஸ்திரேலிய மண்ணில் சதம் அடித்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ், இலங்கையிலும் அசத்தி இருக்கிறார்.
ஒரு வீரர் எந்த அளவுக்கு பார்மில் இருக்கிறார் என்று மட்டும் பார்க்கக்கூடாது. அவர் எந்த நாட்டில் ரன்கள் குவிக்கிறார் என்பதையும் கவனிக்க வேண்டும். அதனால் லோகேஷ் ராகுலை பற்றி அதிகம் பேசுகிறேன்
முதலாவது டெஸ்டில் கிடைத்த முடிவு எனக்கு ஆச்சரியம் அளிக்கவில்லை. கேப்டன் கோலியும், பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் அடுத்த டெஸ்ட் போட்டிக்கு அணியில் அதிரடியான மாற்றங்கள் செய்வார்கள் என்றும் நான் நினைக்கவில்லை. எனது கணிப்புப்படி, ரஹானே அல்லது லோகேஷ் ராகுல் ஆகியோரில் ஒருவர் ஆடும் லெவன் அணியில் சேர்க்கப்படக் கூடும்.
என்னை 2-வது டெஸ்ட் போட்டிக்கு, ஆடும் லெவன் அணியை தேர்வு செய்ய, பரிந்துரை செய்ய சொன்னால், செஞ்சூரியன் ஆடுகளமும் வேகப்பந்து வீச்சுக்கு உகந்த வகையிலேயே இருக்கும். கேப்டவுனை விட இங்கு பந்து அதிகமாக எகிறும் என்பதால் 5 பவுலர்களுடன் களம் இறங்குவேன்.
தவானுக்கு பதிலாக லோகேஷ் ராகுலை சேர்ப்பேன். ஆனால் ரோகித் சர்மாவுக்கு இன்னொரு வாய்ப்பு வழங்குவேன்" என கங்குலி, இந்திய அணி தேர்வு மற்றும் விளையாடும் விதம் குறித்து, வெளிப்படையாக விமர்சித்துள்ளார்.
2-வது டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் நாளை மறுதினம் தொடங்குகிறது. முதல் தோல்வியில் கற்ற பாடத்தை மனதில் வைத்து இந்திய அணி வீரர்கள் செயல்படுவார்களா.? இனி இந்திய அணியின் கை ஓங்குமா.? அல்லது, மீண்டும் மண்டியிட்டு பின் வாங்குமா.? என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.