டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கு: சிபிஐ தொடர்ந்து விசாரிக்க கோவை நீதிமன்றம் அனுமதி

டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை செய்து கொண்ட வழக்கு தொடர்பான விசாரணையை சிபிஐயே தொடர்ந்து நடத்தலாம் என்று கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் டிஎஸ்பியாக இருந்த விஷ்ணு பிரியா கடந்த 2015ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 18ம் தேதி தனது முகாம் அலுவலகத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக் கொண்டார். விஷ்ணுபிரியாவின் உயர் அதிகாரிகளின் அழுத்தம் காரணமாக தற்கொலை செய்துக் கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக வழக்கு செய்யப்பட்டதை அடுத்து சிபிஐ விசாரணை நடத்தி வந்தது. இந்நிலையில், இந்த வழக்கை கைவிடுவதாக சிபிஐ கடந்த ஏப்ரல் மாதம் 16ம் தேதி கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. ஆனால், தனது மகளின் சாவில் சந்தேகம் உள்ளதாக விஷ்ணுபிரியாவின் தந்தை கோவை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இதுதொடர்பான வழக்கு கடந்த 7ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, சிபிஐ தரப்பில், "உயர் அதிகாரிகள் அழுத்தம் கொடுத்ததற்கான ஆதாரம் இல்லை என்றும் அதனால் இந்த வழக்கை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்" என்றது..

விஷ்ணுபிரியா தந்தை சார்பாக ஆஜரான வக்கீல் அருண்மொழி வாதாடும்போது, விஷ்ணுபிரியாவின் சாவில் 7 பேர் மீது விசாரணை நடத்த வேண்டும் என்றும் அப்போது தான் உன்மை வெளிவரும் என்றும் கூறினார். பின்னர் இதுதொடர்பான விசாரணை வரும் 13ம் தேதி நடத்தப்படும் என்று வழக்கை ஒத்தி வைத்தார்.

இந்நிலையில் இந்த வழக்குஇன்று கோவை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, டி.எஸ்.பி. விஷ்ணுபிரியாவின் தற்கொலை வழக்கை தொடர்ந்து சி.பி.ஐ.யே விசாரிக்கலாம் என்று கோவை நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

More News >>