43 ஆண்டுகள் கனவை தகர்த்த இந்திய ஹாக்கி அணி காலிறுதியில் வெளியேறியது

இந்திய ஹாக்கி அணி 43 ஆண்டுகளுக்கு பிறகு அரையிறுதிக்குள் நுழையும் என எதிர்பார்த்த நிலையில், காலிறுதி போட்டியில் நெதர்லாந்து அணியிடம் 2-1 என்ற கணக்கில் தோல்வி அடைந்து வெளியேறியது.

ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில், 14-வது உலக கோப்பை ஆண்கள் ஹாக்கி போட்டி நடைபெற்று வருகிறது. இதில் லீக் ஆட்டங்கள் முடிந்து காலிறுதி போட்டிகள் நேற்று முன் தினம் தொடங்கின.

நேற்று நடைபெற்ற காலிறுதியில் இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின. ஆட்டம் தொடங்கிய 12வது நிமிடத்தில் இந்திய வீரர் ஆகாஷ்தீப் சிங் முதல் கோல் அடித்து 1-0 என இந்திய அணியை முன்னிலை பெற செய்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில், நெதர்லாந்து வீரர் தெய்ரி பிரிங்மேன் 19வது நிமிடத்தில்  ஒரு கோல் அடித்தார். இதனால் இரு அணிகளும் 1-1 என சமனிலை ஆனது.

ஆனால், அதன் பிறகு, இரு அணிகளாலும் கோல் போட முடியவில்லை. ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் நெதர்லாந்து வீரர் மிங்க் வான் டான் வெய்ர்டன் 50வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். இதனால் நெதர்லாந்து அணி 2 - 1 என முன்னிலை பெற்றது. அதன்பின் கோல் அடிக்க போராடிய இந்திய அணியால் ஆட்டம் முடியும் வரை கோல் அடிக்க முடியவில்லை.

இதனால், நெதர்லாந்து அணி இந்தியாவை 2 - 1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் வென்றதன் மூலம் நெதர்லாந்து அணி அரையிறுதிக்குள் நுழைந்தது. இதில் தோற்றதன் மூலம் இந்திய ரசிகர்களின் 43 ஆண்டு கனவு நொறுங்கியது. சொந்த மண்ணிலேயே இந்திய அணியால் அரையிறுதிக்கு கூட போக முடியவில்லையே, என ரசிகர்கள் திட்டித் தீர்த்து வருகின்றனர்.

More News >>