தீவிரமடையும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்: சென்னையில் கனமழை பெய்யும்
வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவடைந்து தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறுவதால், சென்னை மற்றும் தெற்கு ஆந்திராவில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இலங்கை மற்றும் அந்தமான் இடையே மையம் கொண்டிருந்த காற்றழுத்தம் வலுப்பெற்று தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. கடந்த ஒரு வாரமாக காற்றழுத்தம் ஒரே இடத்தில் நிலை கொண்டுள்ளது. காற்றின் போக்கில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாலும், தீவிரமாக வலுடைந்து வருவதாலும் வேகமாக நகர்ந்து வருகிறது.
சென்னைக்கு தென்கிழக்கே 1150 கி.மீ தொலைவில் மசூலிபட்டினத்துக்கு தெற்கு மற்றும் தென்கிழக்கே 1330 கி.மீ தொலைவிலும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டு இருந்தாலும், இன்று வடமேற்கு திசையில் நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அப்படி நகரும்போது, காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறவும் வாய்ப்புள்ளது. இந்த புயல் வட தமிழகம், தெற்கு ஆந்திரா பகுதியை நோக்கி நகர்ந்து நாளை அல்லது நாளை மறுநாள் வந்து சேரும். இதன் எதிரொலியாக, 15 மற்றும் 16ம் தேதி தமிழக கடலோரப் பகுதியில் கனமழை பெய்யும்.
15ம் தேதி சென்னை பகுதிக்கு நெருங்கி வரும் புயல், 16ம் தேதி தெற்கு ஆந்திரப் பகுதியை நோக்கி முன்னேறி 17ம் தேதி காலை நெல்லூர் மற்றும் விசாகப்பட்டினத்துக்கு இடையே கரையைக் கடக்கும்.
இந்த புயல் சின்னம், சென்னை மற்றும் தெற்கு ஆந்திரா பகுதியை நெருங்கும்போது ஒரு சில இடங்களில் மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.