ரபேல் விமான வழக்கு: விரிவான விசாரணை தேவை இல்லை- உச்சநீதிமன்றம் அதிரடி
ரபேல் விமான ஒப்பந்த விவகாரம் குறித்து விசாரணை கோரிய வழக்கில், விரிவான விசாரணை தேவை இல்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த காங்கிரஸ் ஆட்சியின்போது பிரான்ஸ் நாட்டில் இருந்து 126 ரபேல் போர் விமானங்களை வாங்க முடிவு செய்தது. இதற்காக, கடந்த 2012ம் ஆண்டு பிரான்ஸ் அரசுடன் மத்திய அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது. ஆனால், காங்கிரஸ் அரசு திடீரென இதை ரத்து செய்தது.
இதையடுத்து, பிரதமர் மோடியின் ஆட்சிக்கு பிறகு பிரான்ஸ் நாட்டிடம் ரபேல் போர் விமானங்கள் வாங்குவது குறித்து பேசப்பட்டது. இதற்காக, கடந்த 2015ம் ஆண்டு புதிய ஒப்பந்தம் செய்யப்பட்டது.
இந்நிலையில், ரபேல் போர் விமானங்கள் வாங்குவதற்கு செய்யப்பட்ட ஒப்பந்தத்தில் பெரியளவில் முறைகேடு இருப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் குற்றம்சாட்டின. இதற்கு மறுப்பு தெரிவித்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ரபேல் போர் விமான ஒப்பந்தத்தை ரத்து செய்ய முடியாது என்று மறுத்துவிட்டார்.
இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளது. இதில், ரபேல் ஒப்பந்தம் முறைகேடுகள் தொடர்பாக நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் விசாரணை நடத்த வேண்டும் என்று மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன், முன்னாள் மத்திய அமைச்சர்கள் அருண் ஷோரி, யஷ்வந்த் சின்கா உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம்த்தின் உத்தரவை அடுத்து, ரபேல் விமானம் வாங்கியது தொடர்பான விவரங்களை மத்திய அரசு சமர்பித்தது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை முடிவடைந்த நிலையில் இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதில், ரபேல் விமான ஒப்பந்த விவகாரம் குறித்து விசாரணை கோரிய வழக்கில், விரிவான விசாரணை தேவை இல்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.