புதிய தலைமைச் செயலகம் கட்டிட முறைகேடு: தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்தது உயர் நீதிமன்றம்
புதிய தலைமைச் செயலக கட்டிடம் கட்டியதில் முறைகேடு நடந்துள்ளதாக கூறப்பட்ட விவகாரத்தில், லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணைக்கு உத்தரவிட்ட தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய தலைமைச் செயலக கட்டிடம் திமுக ஆட்சியின்போது கட்டப்பட்டது. இதையடுத்து, அதிமுக ஆட்சிக்கு வந்ததும், புதிய தலைமைச் செயலக கட்டிடம் கட்டியதில் பெரிய முறைகேடு நடந்துள்ளதாகவும், இதுதொடர்பாக விசாரணை நடத்தவும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். இதற்காக, உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.ரகுபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்தது குறிப்பிடத்தக்கது.
இதுதொடர்பான விசாரணையில் ஆஜராகும்படி, மறைந்த திமுக தலைவர் கருணாநிதி, திமுக தலைவர மு.க.ஸ்டாலின், முன்னாள் அமைச்சர் துரைமுருகன் ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டது.
ஆனால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை ஐகோர்ட்டில் மூன்று பேரும் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு கடந்த 2015ம் ஆண்டில் விசாரிக்கப்பட்டது. அப்போது, நீதிபதி ஆர்.ரகுபதி விசாரணை ஆணையத்தின் விசாரணைக்கும், சம்மனுக்கும் தடை விதித்து உத்தரவிட்டது.
இதன்பிறகு, இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், நீதிபதி ஆர்.ரகுபதி ஆணையத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் இதுவரை சேகரித்த ஆதாரங்களை ஆய்வு செய்து, முறைகேடுக்கு முகாந்திரம் இருந்தால் அதுகுறித்து விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு உத்தரவிடலாம் என்றும் தீர்ப்பு அளித்தார்.
இதற்கிடையே, நீதிபதி ரகுபதி ஆணையம் சேகரித்த ஆவணங்களின் அடிப்படையில் மு.க.ஸ்டாலின் மற்றும் துரைமுருகனுக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த தமிழக அரசு கடந்த செப்டம்பர் மாதம் 24ம் தேதி அரசாணை பிறப்பித்து உத்தரவிட்டது.இந்த அரசாணையை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மு.க.ஸ்டாலின், துரைமுருகன் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர். இருதரப்பு வாதங்களை கேட்டறிந்த, நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, விசாரணை ஆணையம் என்பது நீதித்துறையின் ஒரு அங்கம் இல்லை என்பதால், ஆணையத்தின் பிரிந்துரைகளை நிச்சயமாக நீதிமன்ற உத்தரவாக கருத தேவையில்லை.
நீதிபதி ஆர்.ரகுபதி ஆணையம் தனது விசாரணை தொடர்பான எந்தவொரு அறிக்கையையும் அரசுக்கு தாக்கல் செய்யவில்லை. உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்தும் அரசு தரப்பில் இதுவரை மேல்முறையீடும் செய்யவில்லை. நீதிபதி ஆர்.ரகுபதி ஆணையம் சேகரித்த ஆவணங்கை மட்டும் அடிப்படையாக கொண்டு அதுதொடர்பாக விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு உத்தரவிட முடியாது. இதனால், லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணைக்கு உத்தரவிட்ட தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டார்.