எத்தனை கோடி செலவானாலும் பரவாயில்லை... மூக்கறுத்த செந்தில் பாலாஜியை தோற்கடிக்க தினகரன் சபதம்!
செந்தில் பாலாஜி மீது கடும் ஆத்திரத்தில் இருக்கிறாராம் தினகரன். கரூரில் அவரைத் தோற்கடிப்பதுதான் முதல் வேலை எனவும் அமமுகவினரும் ஆவேசத்தோடு கூறியிருக்கிறாராம்.
சென்னையில் திமுக தலைமை அலுவலகத்துக்கு ஏராளமான வாகனங்களில் அணிவகுத்து வந்தனர் செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள். உதயசூரியன் சின்னத்தைக் காட்டியபடி அவர்கள் வந்து செல்லும் காட்சிகளை அதிர்ச்சி மாறாமல் கவனித்திருக்கிறார் தினகரன்.
உறுதியாக அவர் திமுக பக்கம் போக மாட்டார் என்றுதான் மன்னார்குடி சொந்தங்கள் நினைத்தார்கள். அவர்கள் எதிர்பார்ப்புக்கு மேலாக, உதயசூரியனில் அவர் ஐக்கியமாக இருப்பது, சசிகலாவுக்குப் பேரதிர்ச்சியைக் கொடுத்துள்ளதாம்.
'மேற்கிலும் தெற்கிலும்தான் நாம் வலுவாக இருந்தோம். இப்போதே மொத்தமாக மேற்கு மாவட்டத்துக்கு ஆப்பு வைத்துவிட்டார்கள். இதனை எப்படிச் சரிக்கட்டுவது?' எனவும் கலங்கிப் போய் இருக்கின்றனர் தினகரனின் அமமுக பொறுப்பாளர்கள்.
கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு உள்பட பலரும், செந்தில் பாலாஜி போவது உண்மையா என மீடியாக்களிடம் கேட்டுக் கொண்டிருந்தனர். தன்னுடைய சோர்ஸுகள் மூலம் உறுதிப்படுத்திய பிறகே காட்டமான அறிக்கை ஒன்றை வெளியிட்டார் தினகரன்.
அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: சிலர் சுயநலனுக்காக தலைமையை விட்டு விலகுவதும் மன்னிப்புக்கோரி இணைவதும் இயல்பான ஒன்றே. துரோகிகளும், விரோதிகளும் அமமுகவின் வளர்ச்சியைத் தடுக்க முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றனர். முலாம் பூசப்பட்ட போலிகள் விலகுவதால் அமமுகவில் யார் வருந்தப்போகிறார்கள்? ஒரு சிறு குழு விலகிச்செல்வதால் அமமுகவிற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. சுத்த தங்கங்களான நீங்கள் இருக்கும் போது முலாம் பூசப்பட்ட போலிகள் விலகுவதால் இங்கு யார் வருந்தப் போகிறார்கள். ஆல விருட்சத்தின் இலைகள் உதிர்வதால் விருட்சம் இல்லாமல் போய்விடுமா? அமமுகவில் இருந்து சில நபர்களோ, குழுவோ சுயநலனுக்காக விலகிச் செல்வதால் கட்சியே முடங்கிவிடும் என்று நினைப்பது பூனை கண்மூடினால் உலகம் இருண்டுவிடும் என்பது போன்றது. அமமுகவை சீண்டிப்பார்ப்பது உயர் அழுத்த மின்சாரத்தை தொட்டு பார்ப்பதற்கு சமம். நெல்மணிகளோடு சில களைகளும் சேர்ந்து வளர்ந்து விடுவது வழக்கமானது. ஒரு சிறு குழு விலகிச் செல்வதால் கட்சிக்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டு விடாது எனப் பதிவு செய்திருந்தார்.
இன்றைய இணைப்பு நிகழ்வை கவனித்த தினகரன், ' தம்பிதுரை, விஜயபாஸ்கரையும் கூட விட்டுவிடலாம். எத்தனை கோடி செலவானாலும் பரவாயில்லை. கரூரில் செந்தில் பாலாஜி மண்ணைக் கவ்வ வேண்டும். அப்போதுதான் நம்மைப் பற்றி துரோகிகள் புரிந்து கொள்வார்கள்' என ஆவேசப்பட்டாராம்.
அருள் திலீபன்