எங்களுக்கு ஏன் அழைப்பு? கருணாநிதி சிலை திறப்பு விழா அழைப்பிதழால் பாஜக ஸ்லீப்பர் செல்களை குழப்பிவிட்ட ஸ்டாலின்!
திமுக தலைமைக்கழகமான அறிவாலயத்தில் நாளை மறுநாள் அண்ணா மற்றும் கருணாநிதியின் உருவச் சிலை திறப்பு விழா நடக்க இருக்கிறது. இதில் பங்கேற்க பாஜக ஆதரவு டி.வி பேச்சாளர்களுக்கும் அழைப்பு விடுத்திருக்கிறார் ஸ்டாலின்.
டெல்லியில் சோனியா காந்தி, ராகுல்காந்தி, சரத் பவார், அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோரை சந்தித்துப் பேசினார் ஸ்டாலின். வரும் 16ம் தேதி தலைமைக் கழக வளாகத்தில் நடைபெற இருக்கும் உருவச் சிலை திறப்பு விழாவுக்கான இன்விடேஷனையும் அவர்களிடம் வழங்கினார்.
இந்த சந்திப்பின் மூலமாக மிகுந்த குதூகலத்தில் இருக்கிறார் ஸ்டாலின். அதே சமயத்தில் திருநாவுக்கரசர் உள்ளிட்ட ஸ்டாலின் எதிர்ப்பாளர்களுக்கு அதிர்ச்சி வைத்தியமாகவும் இருந்தது.
கருணாநிதி உருவச் சிலை திறப்பு நிகழ்ச்சியை மிகப் பிரமாண்டமாக நடத்த விரும்புகிறார் ஸ்டாலின். அதன் ஒரு கட்டமாக 140 அடி உயரத்தினால் ஆன கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார்.
எந்தக் கட்சிக் கொடியும் இந்த அளவுக்கு உயரத்தில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்ச்சியில் ஹைலைட்டான விஷயம், திறப்பு விழாவுக்கான அழைப்பிதழ் யாருக்கெல்லாம் கொடுக்கப்படுகிறது என்பதுதான்.
டி.வி விவாதங்களில் திமுகவுக்கு எதிர்நிலையில் இருந்து எப்போதும் பேசும் பாஜக ஆதரவாளர்களைத் தேடிப்பிடித்து இன்விடேஷன் கொடுத்திருக்கிறார்கள். சுமந்தி சி ராமன், பானு கோம்ஸ், ரவீந்திரன் என யாரையும் அவர்கள் விட்டு வைக்கவில்லை.
'தளபதி உங்களைப் பார்த்து கொடுக்கச் சொன்னார். வி.ஐ.பி பாஸோடு கார் பாஸும் இருக்கிறது. அவசியம் வந்துருங்க சார்...' என வற்புறுத்தி அழைத்துள்ளனர். நமக்கு இப்படியொரு அழைப்பா என அவர்கள் ஆச்சரியப்பட்டுள்ளனர். எதிர்ப்பாளர்களையும் வளைக்கும் யுக்தி தான் இது எனவும் சொல்கின்றனர் திமுக பொறுப்பாளர்கள்.
-அருள் திலீபன்