மேலவளவு முருகேசன் உள்பட 7 தலித்துகளை படுகொலை செய்த கொலையாளிகளை விடுதலை செய்கிறது தமிழக அரசு?
தருமபுரியில் வேளாண்மைப் பல்கலைக்கழக 3 மாணவிகள் உயிருடன் பேருந்தில் வைத்து எரிக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் மூன்று பேரை விடுவிக்க தமிழக ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளதை அடுத்து, வேலூர் சிறையில் இருந்து அவர்கள் விடுவிக்கப்பட்டனர். இதேபோல், சாதி படுகொலைகளை நிகழ்த்தியவர்களையும் விடுவிக்கத் தயாராகி வருகிறார்களாம் அமைச்சர்கள்.
கடந்த 2000-ம் ஆண்டு பிப்ரவரி 2-ம் தேதி கொடைக்கானல் பிளசண்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து அ.தி.மு.க-வினர் தமிழகம் முழுவதும் கலவரத்தில் ஈடுபட்டனர். தருமபுரி மாவட்டத்திலும் கலவரம் நடைபெற்றது. அப்போது இலக்கியம்பட்டி என்ற இடத்தில் கிருஷ்ணகிரி பையூரில் உள்ள வேளாண்மை ஆராய்ச்சி மையத்துக்குச் சுற்றுலா வந்த கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகப் பேருந்தை எரித்ததில் பேருந்தில் சிக்கிய மாணவிகள் கோகிலவாணி, காயத்திரி, ஹேமலதா ஆகியோர் உடல் கருகி பலியாயினர். இந்த வழக்கில் பேருந்தை எரித்த மாது, ரவீந்திரன், முனியப்பனுக்கு தூக்குத்தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.
இதன் பின்னர், குடியரசுத்தலைவருக்கு கருணை மனு அனுப்பியதை அடுத்து, தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை ஒட்டி பல்வேறு வழக்கில் சிறையில் உள்ள ஆயுள் தண்டனை கைதிகளை தமிழக அரசு விடுதலை செய்து வருகின்றது. இந்த நிலையில், மாது, ரவீந்திரன், முனியப்பன் ஆகிய மூவரையும் விடுதலை செய்ய தமிழக அரசு முடிவெடுத்து, அதற்கான பரிந்துரையை ஆளுநருக்கு அனுப்பியது. முதலில் அவர்கள் மூவரை விடுவிக்க ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மறுப்பு தெரிவித்ததாக கூறப்பட்டது. இதனை அடுத்து மீண்டும் தமிழக அரசு சார்பில் பரிந்துரை அனுப்பப்பட்டது. இந்நிலையில், மூவரையும் விடுவிக்க அவர் ஒப்புதல் அளித்தார்.
தமிழக அரசின் இந்த முடிவுக்கு எதிராக மனித உரிமைப் போராளிகள் கடும் கண்டனத்தைத் தெரிவித்தனர். இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாத அமைச்சர்கள் சிலர், தென்மாவட்டங்களில் சாதிப் படுகொலை செய்து நீண்ட காலம் சிறையில் இருப்பவர்களை விடுவிக்க முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதனையொட்டி, எம்ஜிஆர் நூற்றாண்டு விழா காரணமாக கைதிகள் விடுதலை செய்யப்படுவது தொடர்பாக வெளியான அரசாணையில் மாற்றம் செய்ய உள்ளனர். அதில், 'சாதிய படுகொலைகளில் சம்பந்தப்பட்டவர்கள்' என்ற ஒரு வார்த்தையைக் கூடுதலாகச் சேர்க்கும் வேலைகள் நடக்கிறதாம். இதற்காக சிறைத்துறை விதிகளையும் வளைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். இதனால் மேலவளவு முருகேசன் உள்பட 7 தலித்துகள் கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையவர்கள் சிறையில் உள்ளனர். இவர்களை விடுவித்தால் மாவட்டத்தில் செல்வாக்கு பெறலாம் என மூத்த அமைச்சர்கள் பேசி வருகிறார்களாம்.
- அருள் திலீபன்