முன்னாள் அதிமுக அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் திமுகவுக்கு தாவுகிறாரா? திண்டுக்கல்லில் பரபரப்பு!

முன்னாள் அதிமுக அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் திமுகவுக்கு தாவ இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் திண்டுக்கல் மாவட்ட அரசியலில் பெரும் பரபரப்பு  ஏற்பட்டுள்ளது.

தினகரனின் அமமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தமது ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களுடன் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இன்று இணைந்தார். செந்தில் பாலாஜியை தொடர்ந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட சில எம்எல்ஏக்களும் திமுகவிற்கு தாவ இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் திமுகவில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கடந்த சட்டசபை தேர்தல் காலத்தில், ஜெயலலிதாவால் ஒதுக்கிவைக்கப்பட்டவர் நத்தம் விஸ்வநாதன். சட்டசபை தேர்தலில் திண்டுக்கல் ஆத்தூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அதன்பின்னர், தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியே இருந்தார் நத்தம். ஜெயலலிதாவின் மறைவுக்கு பின், ஓபிஎஸ் முதல்வரானபோதும் கூட நத்தம் விஸ்வநாதன் தீவிர அரசியலில் ஆர்வம் காட்டவில்லை.

ஓபிஎஸ் தர்மயுத்தத்தை தொடங்கியபோது, அவரது அணியில் ஐக்கியம் ஆனார் நத்தம் விஸ்வநாதன். இதனை தொடர்ந்து, ஓபிஎஸ் - ஈபிஎஸ் அணிகள் இணைந்த நிலையிலும், நத்தம் விஸ்வநாதனுக்கு திண்டுக்கல் மாவட்ட அரசியலில் முக்கியத்துவம் கொடுக்காமல் ஒதுக்கி வைத்தார் அமைச்சர் சீனிவாசன். இதனால், கடும் அதிருப்தியில் இருந்த நத்தம் விஸ்வநாதன் தற்போது திமுகவுக்கு தாவ இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

More News >>