ஆபரேஷன் செந்தில் பாலாஜி... அதிமுக வியூகத்தை அடித்து நொறுக்கிய அன்பில் பொய்யாமொழி மகேஷ்!

முலாம் பூசப்பட்ட போலிகள் என தினகரன் கோபப்பட்டாலும் எந்த விமர்சனத்தையும் முன்வைக்காமல் மரபு அல்ல எனக் கூறி ஒதுங்கிக் கொண்டார் செந்தில் பாலாஜி. இந்த ஆப்ரேஷனுக்குக் காரணமானவர்களுக்கு நன்றி கூறினாராம் ஸ்டாலின்.

 

மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அதிகாரபூர்வமாகத் திமுகவில் இணைந்துவிட்டார் செந்தில் பாலாஜி. இதனை உறுதிப்படுத்திய தினகரன், நேற்று வெளியிட்ட அறிக்கையில் காட்டமாகவே செந்தில் பாலாஜியை விமர்சித்திருந்தார்.

இதனை திமுகவினர் சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை. அவர்களின் ஒரே இலக்கு, கொங்கு வட்டாரத்தில் செல்வாக்கு பெற வேண்டும் என்பதுதான்.

செந்தில் பாலாஜியை வளைத்தது பற்றிப் பேசிய திமுகவினர், ' இதற்கு முழுக் காரணம் திருச்சி அன்பில் பொய்யாமொழி மகேஷ்தான். அவர் மூலமாகத்தான் கட்சிக்குள் மீண்டும் இணைய வந்தார் செந்தில் பாலாஜி என்கின்றனர்.

அதாவது கடந்த 2 மாதமாக செந்தில் பாலாஜி, தினகரனிடம் விலகியே இருந்தார். அவர் தினகரனை விட்டு வெளியேறும் முடிவில் இருந்தார்.

இதை அறிந்த அதிமுக தரப்பு அவருடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இப்பேச்சுவார்த்தையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி எப்போது அழைத்தாலும் தாம் வர தயார் என்கிற நிலையில்தான் இருந்தார் செந்தில் பாலாஜி.

இது திமுக தலைமையின் காதுகளுக்கும் போனது. ஏற்கனவே 20 தொகுதி இடைத்தேர்தல் குறித்த சபரீசன் டீம் அறிக்கையில் அரவக்குறிச்சி தொகுதியில் செந்தில்பாலாஜி சுயேட்சையாக நின்றாலும் வெல்வது உறுதி என கூறப்பட்டிருந்தது.

கொங்குபெல்ட்டில் ஏற்கனவே திமுக பலவீனமாக இருக்கிறது. ஆகையால் கூட்டி கழித்துப் பார்த்து செந்தில் பாலாஜியுடன் நாம் பேசினால் என்ன திமுக தலைமை முடிவெடுத்தது.

இதையடுத்து சபரீசன் டீமில், அன்பில் பொய்யாமொழி மகேஷிடம் இந்த பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. அதிமுகவுக்கே போகலாம் என்கிற முடிவில் இருந்த செந்தில் பாலாஜியுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவரை மட்டுமல்லாமல் முக்கிய நிர்வாகிகள் பலரையும் கூண்டோடு திமுகவுக்கு அள்ளி வந்து ஆபரேஷனை சக்சஸ் ஆக்கிவிட்டார் மகேஷ்.

இதனால் ஒட்டுமொத்தமாக சபரீசன் டீம் மகிழ்ச்சியில் இருக்கிறது. அடுத்தடுத்த ஆபரேஷன்கள் சுமூகமாக முடிவதால் ‘மாப்பிள்ளை சபரீசன் டீம்’ மீது ரொம்பவே நம்பிக்கை வைத்திருக்கிறாராம் ஸ்டாலின்.

More News >>