விக்ரம் பிரபுவுக்கு திருப்பு முனையாகுமா இந்த துப்பாக்கி முனை?

தொடர் தோல்விக்கு பிறகு விக்ரம் பிரபுவிற்கு கிடைத்த நல்ல படமாகவே துப்பாக்கி முனை அமைந்துள்ளது. ஆனால், சில சொதப்பல்களால் சிறந்த படமாக அமையவில்லை.

2017ஆம் ஆண்டு வெளியான நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவும் தப்பில்ல என்ற படத்தை இயக்கிய தினேஷ் செல்வராஜ் விக்ரம் பிரபு – ஹன்சிகாவை வைத்து என்கவுண்டர் படத்தை இயக்கியுள்ளார்.

படத்தின் கதை:

மும்பையில் உதவி கமிஷனராக இருக்கும் விக்ரம் பிரபு ஒரு என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட், அதுவும் 33 பேரை என்கவுண்டர் செய்த முரட்டுத்தனமான என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட், இதனால், அவரது அம்மாவே அவரை விட்டு பிரிந்துள்ளதாக செண்டிமெண்ட்டுக்கும் முக்கியத்துவம் கொடுத்துள்ளார் இயக்குநர். காதலியாக வரும் ஹன்சிகாவும், இதே காரணத்திற்காக நாயகனை விட்டு பிரிகிறார்.

இப்படி சொந்தங்களை விடுத்து தனிமையில் வாடும் விக்ரம் பிரபுவுக்கு, ராமேஷ்வரத்தில் இளம்பெண்ணை பலாத்காரம் செய்த ஒருவனை என்கவுண்டர் செய்ய ஆணை வருகிறது.

ஆனால், இளம்பெண்ணை பலாத்காரம் செய்த நபர் எனக் கூறப்படும் ஷா, நிரபராதி என விக்ரம் பிரபுவுக்கு தெரியவர, அவரை என்கவுண்டரில் இருந்து எப்படி காப்பாற்றுகிறார் என்பதை சுவாரஸ்யமாக சொல்லி இருக்கிறார் இயக்குநர்.

பிளஸ்:

படத்தில் நிஜ ஹீரோ என்றால் அது எம்.எஸ். பாஸ்கர் தான். கடைசி கிளைமேக்ஸிலும் அவர் பேசும் உருக்கமான வசனங்கள் பெண்களை பெற்றவர்களுக்கு எச்சரிக்கை ஒலியாகவும், பெண்கள் மீது இந்த சமூகத்தில் நடத்தப்படும் கொடுமைகளும் அப்பட்டமாக வெளிப்படுகின்றன.

படத்தின் நிஜ வில்லன் வேல ராமமூர்த்தி, அவரை ராவணன் போல சித்தரிக்க நினைத்த இயக்குநர், அவருக்கு ஓம் நம சிவாயா என்ற வசனத்தையும், வீணை மீட்டும் காட்சியையும் அமைத்துள்ளார்.

மைனஸ்:

ஹன்சிகா வழக்கம் போல இந்த படத்திலும், எக்ஸ்ட்ரா லக்கேஜ் தான். விக்ரம் பிரபு, இருமுகம் விக்ரம் போல, இறுக்கமான தோற்றத்தில் படம் முழுக்க அசத்துகிறார்.

இப்படியொரு படத்தில் கிளைமேக்ஸில் ஷாவை காப்பாற்ற பழைய பாணி டெக்னிக்கை விக்ரம் பிரபு பயன்படுத்துவது தான் படத்திற்கு மிகப்பெரிய மைனஸாக அமைந்துவிட்டது.

மேலும், எல்வி முத்துகணேஷ் இசையில், ஒரு பாடலும் ரசிக்கும் படி இல்லை. எல்லாமே ஏற்கனவே கேட்ட மாதிரியே இருக்கிறது. தலை விடுதலை பாடல் ராகம் கூட ஒரு இடத்தில் ஒலிப்பது நன்றாகவே உணரலாம்.

ஆனாலும், படத்தை தாராளமாக ஒருமுறை தியேட்டரில் போய் பார்க்கும் படியாகத் தான் இருக்கிறது.

துப்பாக்கி முனை ரேட்டிங்: 1.75/5.

More News >>