வீட்டுலயே செய்யலாம் கருப்பட்டி மிட்டாய்!
வீட்டுலயே சுவையாகவும், ஆரோக்கியமாகவும் தயாரிக்கலாம் கருப்பட்டி மிட்டாய்.. இப்போ எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்..
தேவையான பொருள்கள்:
இட்லி அரிசி - 1 கப்
உளுத்தம் பருப்பு - 1/4 கப்
எண்ணெய் - தேவையான அளவு
கருப்பட்டி - 2 கப்
செய்முறை:
முதலில் இட்லி அரிசி மற்றும் உளுத்தம் பருப்பை நன்கு கழுவி, பின் நீரில் 4 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின் அதிலுள்ள நீரை முற்றிலும் நீக்கி விட்டு, அதை நன்கு மென்மையாகவும், கெட்டியாகவும் அரைத்து எடுத்து கொள்ள வேண்டும். அரைத்த மாவை சேர்த்து 1/2 அல்லது 1 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் கருப்பட்டியை எடுத்து கொண்டு நன்கு தட்டி, ஒரு வாணலியில் போட்டு தண்ணீர் ஊற்றி, கருப்பட்டியை நன்கு கரைய வைக்க வேண்டும். கருப்பட்டி கரைந்ததும், அதனை இறக்கி ஓரளவு குளிர்ந்ததும், வடிகட்டி மீண்டும் வாணலியில் ஊற்றி 6-8 நிமிடம் சற்று கெட்டியாகும் வரை கொதிக்க விட வேண்டும்.
பிறகு அதில் தேவையான அளவு ஏலக்காய் பொடி, சுக்குப் பொடி சேர்த்து கிளறி இறக்கி விட வேண்டும். பின் வேறொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும். பின்பு தனியாக ஊற வைத்துள்ள மாவை ஒரு கெட்டியான கவரில் சிறிது வைத்து, அந்த கவரில் முறுக்கு போன்று வரும் அளவில் ஓட்டை போட்டு, எண்ணெய் சூடானதும், அதில் வட்ட வட்டமாக பிழிந்து விட்டு, பொன்னிறமானதும், பொரித்து எடுத்து கருப்பட்டி பாகுவில் போட்டு 2 நிமிடம் முன்னும், 2 நிமிடம் பின்னும் திருப்பிப் போட்டு ஊற வைத்து எடுக்க வேண்டும்.
இதேப் போல் அனைத்து மாவையும் செய்தால், சுவையான மற்றும் ஆரோக்கியமான ருசியான கருப்பட்டி மிட்டாய் ரெடி!!!