கூகுள் ஷாப்பிங்: தேடுபொறியில் புதிய வசதி!

பொருள்களை வாங்குவோரின் வசதிக்காக கூகுள் தேடுபொறியில் 'கூகுள் ஷாப்பிங்' ( Google Shopping in India) என்ற புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பல்வேறு தயாரிப்புகளின் விற்பனையாளர்கள் பற்றிய விவரங்களை இதன் மூலம் எளிதாக அறிந்து கொள்ள முடியும்.

போன்கள், ஆடைகள், புத்தகங்கள், கைக்கடிகாரங்கள் மற்றும் பல்வேறு பொருள்களில் தற்போது மக்கள் விரும்பி வாங்கும் ரகங்கள், மக்களிடையே பிரபலமாயிருக்கும் தன்மை ஆகியவற்றின்படியும் 'கூகுள் ஷாப்பிங்' பொருள்களை வகைப்படுத்திக் காட்டும். செய்திகள், வரைபடங்கள், வீடியோக்கள் மற்றும் புத்தகங்களுக்கு அடுத்தபடியாக 'ஷாப்பிங்' என்றொரு புதிய பகுதி கூகுள் தேடுபொறியில் சேர்க்கப்பட்டுள்ளது.

தயாரிப்புகளின் பெயர், விற்பனைக்கு கிடைப்பது போன்ற பல்வேறு வகைப்பாடுகளுக்கேற்ப கூகுள் ஷாப்பிங் மூலம் பொருள்களை தொகுத்துப் பார்க்க இயலும். ஒன்றுக்கு மேற்பட்ட விற்பனையாளர்களிடம் குறிப்பிட்ட ஒரு பொருள் என்னென்ன விலைகளில் கிடைக்கிறது என்று ஒப்பிடவும் இயலும். தற்போது ஆன்லைன் விற்பனை நிலையங்களில் கிடைக்கும் விலை மட்டுமே கூகுள் ஷாப்பிங்கில் காட்டப்படுகிறது.

வரும் நாள்களில் ஆன்லைன் அல்லாத ஏனைய கடைகளிலும் பொருள்களின் விலை விவரங்கள் இதில் கிடைக்குமாம், இந்தியாவில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த கூகுள் ஷாப்பிங்கில் விவரங்கள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கூகுள் ஷாப்பிங், மொபைல்போன்கள், மேசை கணினிகள் மற்றும் இணைய செயலி (PWA) ஆகியவற்றில் இயங்குகிறது. கூகுள் தேடுபொறியில் ஷாப்பிங் முதன்மை பக்கம், ஷாப்பிங் டேப் (tab) வகையிலும் கூகுள் லென்ஸிலும் இப்புதிய வசதி கிடைக்கும்.

ஆண்டுதோறும் 4 கோடிக்கும் அதிகமானோர் இந்தியாவில் இணையத்தை பயன்படுத்துகின்றனர். இணைய பயன்பாட்டில் தேடுபொறி மிக முக்கிய அம்சம். நெடுநாள் பயன்பாட்டாளர்கள் மற்றும் ஸ்மார்ட்போன் மூலம் முதன்முறையாக இணையத்தை பயன்படுத்துவோர் என அனைவருக்கும் ஆன்லைன் மூலம் பொருள்கள் வாங்குவதை கூகுள் ஷாப்பிங் எளிதாக்கும் என்று கூகுள் நிறுவனத்தின் தயாரிப்பு மேலாண்மை பிரிவு உதவி தலைவர் சுரோஜித் சட்டர்ஜி கூறியுள்ளார்.

More News >>