மத்திய பிரதேச முதல்வராக திங்களன்று பதவியேற்கிறார் கமல்நாத்
மத்திய பிரதேச மாநில முதல் அமைச்சராக மத்திய முன்னாள் அமைச்சர் கமல்நாத் பதவியேற்க இருக்கிறார். மாநில ஆளுநர் ஆனந்திபென் படேல் ஆட்சியமைக்க காங்கிரஸ் கட்சிக்கு அழைப்பு விடுத்துள்ளதை அடுத்து டிசம்பர் 17 (திங்கள்) பிற்பகல் 1:30 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெற உள்ளது.
நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் மொத்தமுள்ள 230 தொகுதிகளில் 114 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. ஆட்சியமைக்க 116 உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்ற நிலையில் காங்கிரஸ் அதிருப்தி சுயேச்சை எம்.எல்.ஏக்கள் நால்வர், பகுஜன் சமாஜ் கட்சியின் எம்.எல்.ஏக்கள் இருவர் மற்றும் சமாஜ்வாடி கட்சியின் ஒரு எம்.எல்.ஏ உள்பட 121 பேர் தமக்கு ஆதரவளிப்பதாக கமல்நாத், மாநில ஆளுநர் ஆனந்திபென் படேலிடம் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை தலைவராக தாம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கடிதத்தை ஆளுநரிடம் கமல்நாத் சமர்ப்பித்தபோது முன்னாள் முதல்வர் திக்விஜய் சிங், சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவராக இருந்த அஜய் சிங், கட்சி மாநில முன்னாள் தலைவர்கள் அருண் யாதவ், சுரேஷ் பச்சோரி ஆகியோர் உடனிருந்தனர். மத்திய முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் பரப்புரை குழு தலைவருமான ஜோதிராதித்யா சிந்தியா இக்குழுவினருடன் செல்லவில்லை.
திங்கள் கிழமை பிற்பகல் 1:30 மணிக்கு போபால் லால் பரேடு மைதானத்தில் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. மத்திய பிரதேசத்தில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் ஆட்சியமைக்கிறது. தற்போது மக்களவையில் சிண்ட்வாரா தொகுதி உறுப்பினராக கமல்நாத் இருந்து வருகிறார். கொல்கத்தா புனித சேவியர் கல்லூரியில் பி.காம். பட்டம் பெற்றுள்ள கமல்நாத், ஒன்பது முறை மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மத்திய அமைச்சரவையில் வர்த்தகம் மற்றும் தொழில்துறை, சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைதுறை, நகர்ப்புற வளர்ச்சித் துறை மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் துறை என்று பல்வேறு துறைகளுக்கு கமல்நாத் பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.