முடிவுக்கு வந்தது இலங்கை அரசியல் நெருக்கடி: பிரதமராக பதவி ஏற்கிறார் ரணில் விக்ரமசிங்கே

இலங்கையில் நாடாளுமன்றத்தை அதிபர் கலைத்தது செல்லாது என்று உச்ச நீதிமன்றம் தீப்பளித்துள்ளதை அடுத்து, பிரதமர் ராஜபக்சே இன்று தன் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, ரணில் விக்ரமசிங்கே நாளை பதவி ஏற்கிறார்.

இலங்கையில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிப்பெற்று ரணில் விக்ரமசிங்கே பிரதமராக பதவி ஏற்றார். இதையடுத்து, கடந்த அக்டோபர் மாதம் 26ம் தேதி அதிபர் சிறிசேனா ரணில் விக்ரமசிங்கேவை நீக்கிவிட்டு ராஜபக்சேவை பிரதமராக நியமித்தார். இதன்மூலம், இலங்கை அரசியில் குழப்பம் ஏற்பட்டது.

இதையடுத்து, ராஜபக்சேவிற்கு பெரும்பான்மை இல்லாததால் நாடாளுமன்றத்தை கலைத்து உத்தரவிட்டார் சிறிசேனா. தொடர்ந்து, வரும் ஜனவரி மாதம் 5ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

அதிபர் சிறிசேனாவின் நடவடிக்கையை எதிர்த்து இலங்கை உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ராஜபக்சே பிரதமராக தொடர இடைக்கால தடை விதித்தது.

இந்த வழக்கின் விசாரணை முடிவில், நேற்று முன்தினம் இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்தது செல்லாது என அறிவித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவிற்கு இடைக்கால தடை விதிக்கக்கோரி, ராஜபக்சே தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. ஆனால், இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இந்த பரபரப்பான சூழலில், ராஜபக்சே இன்று தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். ராஜினாமா கடிதத்தை அதிபர் சிறிசேனாவுக்கு ராஜபக்சே அனுப்பி வைத்துள்ளார். இதனால், ரணில் விக்ரமசிங்கே மீண்டும் பிரதமர் பதவி ஏற்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி, ரணில் விக்ரமசிங்கே நாளை காலை 10.30 மணிக்கு ஜனாதிபதி அலுவலகத்தில் பிரதமராக பதவி ஏற்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News >>