தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம்: தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலை மூலம் வெளியேறும் கழிவால் அதை சுற்றியுள்ள மக்களுக்கு உடல் ரீதியாக பாதிப்புகள் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால், ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி, கடந்த மே மாதம் தூத்துக்குடியில் ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வெடித்த கலவரத்தில், போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் அப்பாவி மக்கள் 13 பேர் பலியானார்கள்.

இந்த சம்பவத்தை அடுத்து, ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதையடுத்து, ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஸ்டெர்லைட் நிர்வாகம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், அதன் சார்பில் நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் குழு அமைத்து ஆய்வு செய்ய உத்தரவிட்டது.

ஸ்டெர்லைட் ஆலை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் ஆய்வு செய்த குழுவினர், சில நிபந்தனைகளுடன் ஆலையை திறக்கலாம் என்று தாக்கல் செய்த அறிக்கையின் மூலம் குறிப்பிட்டிருந்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அறிக்கையை ஆய்வு செய்த பசுமை தீர்ப்பாயம், சில நிபந்தனைகளுடன் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கலாம் என்று உத்தரவிட்டுள்ளது.

தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் முடிவு தூத்துக்குடி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும், இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம் என்றும் கருதப்படுகிறது.

More News >>