பெரியாரின் பாதையில் செல்கிறாரா சிம்பு?

சிம்பு பாடி நடித்துள்ள 'பெரியார் குத்து' என்ற பாடல் ஆல்பம் வெளியாகியுள்ளது. 'வந்தா ராஜாவாதான் வருவேன்' படத்தைத் தொடர்ந்து 'மாநாடு' என்ற படத்தில் நடிக்க இருக்கிறார் சிம்பு. இப்படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். மாநாடு படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் முதல் ஆரம்பமாகும் என தெரிகிறது.

சிம்பு தன் தந்தையைப் போன்று பல்வேறு துறைகளில் ஆர்வம் கொண்டவர். குறிப்பாக நடிப்பை தாண்டி நடனம், இசை ஆகியவற்றில் அவருக்கு ஈடுபாடு அதிகம். அதனால், 'பெரியார் குத்து' பாடல் ஆல்பத்தில் அவர் முழு ஈடுபாடு காட்டியுள்ளார்.

இப்பாடல் ஆல்பத்தை 'ரிபேல் ஆடியோ' நிறுவனம் வெளியிட்டுள்ளது. இசையமைப்பாளர் ரமேஷ் தமிழ்மணி எண்ணத்தில் உருவான இந்த ஆல்பத்திலுள்ள பாடல்களை மதன் கார்க்கி எழுதியுள்ளார். பெரியாரின் 'பஞ்ச்' வசனங்களை அதிக அளவில் கொண்ட இந்தப் பாடல்களை சிம்பு பாடினால் நன்றாக இருக்கும் என்று ரமேஷ் தமிழ்மணி அவரை அணுகியுள்ளார்.

மக்களுக்குப் பிரச்னைகளை தரும் ஆலைகள் முதல் பெரியார் சிலைகள் உடைக்கப்படுவது வரைக்கும் அனைத்து தகிக்கும் விஷயங்களும் பாடல்களில் அடங்கியுள்ளன.

'ராக்கெட் ஏறி வாழ்க்கை போகுறப்போ, சாக்கடைக்குள்ள முங்காதவே!சாதிச்சவன் சாதி என்னனு கூகுள்ல போய் தேடாதவே!' என்பது சாம்பிளுக்கு ஒரு வரி! பெரியார் அதிகம் பயன்படுத்தும் 'வெங்காயம்' என்ற வார்த்தையும் ஆங்காங்கே இடம்பெற்றுள்ளது. இந்த ஆல்பம் பார்த்திபன் ரவியின் இயக்கத்தில் உருவாகியுள்ளது.

பெரியாரின் கருத்துகளைக் குறித்து மிகுந்த அக்கறையோடு இந்த ஆல்பத்தில் பாடி நடித்துள்ளதால் பெரியாரின் பாதையில் சிம்பு செல்ல இருக்கிறாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

More News >>