மீண்டும் ராஜ்யசபா சீட் கேட்டு அடம்பிடிங்க... தூண்டிவிடும் தயாநிதி... நிராகரித்த கனிமொழி
லோக்சபா தேர்தலில் போட்டியிடாமல் மீண்டும் ராஜ்யசபா சீட் கேட்டு திமுக தலைவர் ஸ்டாலினுக்கு நெருக்கடி கொடுக்க கனிமொழியிடம் தூண்டிவிட்டுள்ளாராம் தயாநிதி. ஆனால் கனிமொழியோ தம்மை சிறைக்கு அனுப்பி வைத்த தயாநிதியை நம்ப தயாராக இல்லை என்கின்றன சிஐடி காலனி வட்டாரங்கள்.
முரசொலி மாறன் மறைந்த போது அந்த இடத்துக்கு மகள் கனிமொழியை கொண்டுவர நினைத்தார் கருணாநிதி. ஆனால் கனிமொழியோ தமக்கு இப்போதைக்கு அரசியல் வேண்டாம்; முரசொலி மாறன் மகன் கலாநிதிக்கு அந்த வாய்ப்பை தரலாம் என நிராகரித்தார்.
கலாநிதி மாறனோ, தமக்கு பிசினஸை பார்க்கவே நேரம் இல்லை; அரசியல் சரிவராது என ஒதுங்கிக் கொண்டார். இதனால் தயாநிதி மாறனுக்கு வாய்ப்பு கிடைத்தது.
இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு திமுகவை கைப்பற்ற மாறன் சகோதரர்கள் திட்டமிட்டனர். இதனால் அவர்களை கருணாநிதியே ஒதுக்கி வைக்கும் நிலைமை உருவானது.
அப்போதுதான் திமுகவை களங்கப்படுத்த 2ஜி விவகாரத்தை தீவிரமாக கையில் எடுத்தனர் மாறன் சகோதரர்கள். கடைசியில் ஆ.ராசா, கனிமொழி ஆகியோர் திஹார் சிறைவாசத்தை அனுபவிக்கும் நிலைமையும் ஏற்பட்டது.
தமது இடத்தை விட்டுக் கொடுத்து தயாநிதி மாறனுக்கு வாய்ப்பு கொடுத்தோம்; ஆனால் தயாநிதி மாறன் தம்மை சிறைக்கு அனுப்பிவிட்டார் என்கிற கோபம் கனிமொழி தரப்பில் இன்னமும் இருக்கிறது.
இந்த நிலையில்தான் தயாநிதி மாறனின் டெல்லி அரசியலுக்கு ‘மாப்பிள்ளை’ சபரீசன் மூலம் முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் ஸ்டாலின். இதை சகிக்க முடியாத மாறன் சகோதரர்களோ, கனிமொழியை தொடர்பு கொண்டு, சபரீசனுக்கு ராஜ்யசபா சீட் தரப் போறாங்க... நீங்க லோக்சபா தேர்தலில் போட்டியிடாமல் மீண்டும் ராஜ்யசபா சீட் கேளுங்க என தூண்டிவிட்டிருக்கின்றனர்.
மாறன் சகோதரர்கள் மீது கடுப்பில் இருக்கும் கனிமொழிதரப்பு எடுத்த எடுப்பிலேயே இதை நிராகரித்த கையோடு ஸ்டாலினுக்கும் தகவல் கொடுத்துவிட்டதாம்.
- எழில் பிரதீபன்