சிலை திருட்டு: இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி திருமகள் அதிரடி கைது

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் சிலை திருட்டு வழக்கில் தலைமறைவாக இருந்த இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகள் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் குடமுழுக்கின் போது பழங்கால சிலைகள் மாற்றப்பட்டன; பின்னர் அவை வெளிநாட்டில் விற்கப்பட்டன என்பது புகார். இது தொடர்பாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இவ்வழக்கில் இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகளுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது. இதையடுத்து திருமகள் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

திருமகளின் முன்ஜாமீன் மனுவை நீதிமன்றம் நிராகரித்தது. இதனைத் தொடர்ந்து திருமகள் தலைமறைவாகிவிட்டார். அவரை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் தேடி வந்தனர்.

இந்நிலையில் தலைமறைவாக இருந்த திருமகளை சென்னை சிலை கடத்தல் தடுப்பு போலீசார் இன்று அதிரடியாக கைது செய்துள்ளனர்.

 

More News >>