ஜனநாயகத்தையும் அரசியல் சாசனத்தையும் காக்க வேண்டிய கடமை உள்ளது- சந்திரபாபு நாயுடு
நாட்டின் ஜனநாயகத்தையும் அரசியல் சாசனத்தையும் காப்பாற்ற வேண்டிய கடமை உள்ளது என ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு வலியுறுத்தினார்.
சென்னை ராயப்பேட்டையில் கருணாநிதி சிலை திறப்புக்குப் பின் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சந்திரபாபு நாயுடு தமிழில் பேசியதாவது:
நாட்டின் மூத்த தலைவர் கருணாநிதி. அவரது சிலை திறப்பில் பங்கேற்பதில் பெருமை அடைகிறேன்.
80 ஆண்டுகாலம் அரசியலில் ஈடுபட்டவர் கருணாநிதி. 50 ஆண்டுகாலம் தலைவராக திகழ்ந்து, ஒரு தேர்தலிலும் தோற்காதவர் கருணாநிதி.
இன்றைய தலைமுறைக்கு கருணாநிதி வாழ்க்கை உதாரணம். பாஜக ஆட்சியில் நாட்டு மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை. பாஜக நெருக்கடியால் ரிசர்வ் வங்கி ஆளுநர்கள் ராஜினாமா செய்துவிட்டனர்.
இப்போதைய சூழலில் ஜனநாயகத்தையும் அரசியல் சாசனத்தையும் காக்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது. இவ்வாறு சந்திரபாபு நாயுடு பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய கேரளா முதல்வர் பினராயி விஜயன், தாம் வாழ்ந்த காலத்தில் முன்னோடியாக இருந்தவர் கருணாநிதி என்றார்.