மூன்று மாநிலங்களில் இன்று முதல்வர் பதவி ஏற்பு விழா: ராகுல் காந்தி பங்கேற்பு
மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் இன்று காங்கிரசார் பதவி ஏற்கவுள்ளனர்.
5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவில், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் வெற்றிக் கொடியை நாட்டியது காங்கிரஸ்.
மத்திய பிரதேச முதல்வராக அம்மாநில மூத்த தலைவர் கமல்நாத் பெயர் அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, ராஜஸ்தான் முதல்வராக அசோக் கெலாட், துணை முதல்வராக சச்சின் பைலட் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். சத்தீஸ்கர் முதல்வராக அம்மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் பூபேஷ் பகேல் அறிவிக்கப்பட்டார். இவர்கள் மூன்று பேரும் இன்று முதல்வராக பதவி ஏற்கவுள்ளனர். இதற்கான நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர்.
முதலாவதாக, ராஜஸ்தான் மாநில முதல்வராக அசோக் கெலாட், துணை முதல்வராக சச்சின் பைலட் ஆகியோர் இன்று காலை 10 மணியளவில் ஜெய்ப்பூரில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஆல்பர்ட் மண்டபத்தில் பதவியேற்க இருக்கின்றனர்.
தொடர்ந்து, மத்திய பிரதேச மாநில முதல்வராக கமல்நாத் இன்று நன்பகல் 1.30 மணிக்கு போபாலில் உள்ள ஜம்பூரி மைதானத்தில் பதவியேற்கிறார்.
சத்தீஸ்கர் மாநில முதல்வராக பூபேஷ் பகேல், இன்று மாலை 5 மணிக்கு ராய்ப்பூரில் பதவி ஏற்கவுள்ளார். இந்நிகழ்ச்சிகளில் ராகுல் காந்தி, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.