அதிகாரிகளை வியக்க வைத்த கோவா முதல்வர்: மூக்கில் உணவு குழாயுடன் ஆய்வு
உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் மூக்கில் உணவு குழாய் பொருத்தியபடி ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
கோவா மாநில முதல்வர் மனோகர் பாரிக்கர் கடந்த சில நாட்களாக கணைய புற்றுநோய் பாதிப்பால் கடுமையாக பாதிக்கப்பட்டு வந்தார். இதனால், டெல்லி, மும்பை, அமெரிக்கா ஆகிய இடங்களுக்கு சென்று சிகிச்சை பெற்றார்.
எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மனோகர் பாரிக்கர் கடந்த அக்டோபர் மாதம் 14ம் தேதி வீடு திரும்பினார். அதன்பிறகு, வெளியில் எங்கும் செல்லா வீட்டில் இருந்தபடியே தனது முதல்வர் பணிகளை மேற்கொண்டார்.
இருப்பினும், எதிர்கட்சிகள் பல்வேறு வழிகளில் அழுத்தம் கொடுத்து வந்த நிலையில், கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் நேற்று முதல்முறையாக வெளியே வந்து ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ளார்.
பனாஜி நகர் - வடக்கு கோவாவை இணைக்கும் பாலம் ஒன்று மண்டோவி நதியின் குறுக்கே கட்டப்பட்டு வருகிறது. இந்த பாலப்பணிகளை நேற்று மனோகர் பாரிக்கர் நேரில் பார்வையிட்டார். இதேபோல், ஜூவாரி நதியில் நடந்து வரும் மற்றொரு பாலம் கட்டும் பணியையும் பாரிக்கர் பார்வையிட்டார்.
மூக்கில் உணவுக் குழாய் பொருத்திக் கொண்டு மனோகர் பாரிக்கர் ஆய்வு பணிகளை மேற்கொண்டார். இந்த உணவுக் குழாய் மூலம் தான் உணவு, மருந்து கொடுக்கப்பட்டு வருகிறது. மூக்கில் உணவுக் குழாயுடன் பாலப் பணிகளை நேரில் பார்வையிட்ட மனோகர் பாரிக்கரின் செயல் அதிகாரிகளை வியக்க வைத்துள்ளது.