நெல் ஜெயராமன் மரணம் தந்த வேதனை - கண்ணீர் வடித்த அற்புதம்மாள்

ட்விட்டர் பக்கத்தில் இணைந்ததில் இருந்தே பேரறிவாளனின் விடுதலைக்காக எழுதி வருகிறார் அற்புதம்மாள். வயது மூப்பு காரணமாக என்னால் சில நேரங்களில் இயங்க முடியவில்லை எனவும் வேதனையோடு பதிவிட்டிருக்கிறார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 7 பேரின் விடுதலை குறித்து தமிழக ஆளுநர் முடிவெடுக்கலாம் என உச்ச நீதிமன்ற அமர்வு தீர்ப்பளித்ததையடுத்து, செப்டம்பர் 9-ம் தேதி அன்று தமிழக அமைச்சரவைக் கூட்டம் கூடியது. இந்தக் கூட்டத்தின் முடிவில் சிறை அதிகாரிகளின் பரிந்துரைகள், சிறைக் கோப்புகள், அமைச்சரவை தீர்மானம், சட்டவிதி 161-ன் படியான கருணை மனு ஆகியவை ஒருங்கிணைக்கப்பட்டு, தமிழக ஆளுநரின் பார்வைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. ஆளுநர் பன்வாரிலால் புரோகித், உறுதியான முடிவுகள் ஏதும் எடுக்காமல் இழுத்தடித்து வருகிறார்.

7 பேரையும் விடுவிக்க வேண்டும் என மனித உரிமை ஆர்வலர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்திப்பது, ஆளுநரைச் சந்திப்பது எனத் தொடர்ந்து போராடி வருகிறார் அற்புதம்மாள். அதன் ஒரு பகுதியாக, பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள், ட்விட்டர் பக்கத்தில் இணைந்துள்ளார்.

பேரறிவாளன் விடுதலைக்கு வலு சேர்க்கும் வகையில் ட்விட்டரில் தொடர்ந்து குரல்கொடுக்க உள்ளார். உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு வெளியாகி 100 நாள்களைக் கடந்துவிட்டதை இன்று பதிவின் மூலம் வெளிக்காட்டியிருக்கிறார். இதுதொடர்பாக மீடியாக்களுக்கு அவர் அனுப்பியுள்ள செய்தியில், ' எனது மகனின் நீதிக்காக கடந்த 28 ஆண்டுகளாக போராடி வரும் எனக்கு மக்கள்தான் ஒரு பலம். எனது வயது மூப்பு சில நேரங்களில் என்னை இயங்க விடாமல் செய்து விடுகிறது.

விடுதலை முயற்சிக்கான சில நிகழ்வுகளில் கலந்து கொள்ள முடியாமல் போவது மட்டுமல்ல பேரழிவு தந்த "கஜா" புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு என்னால் ஆறுதலாக இருக்க முடியவில்லையே என்கிற வருத்தம் இருக்கிறது. எனது புதல்வன் விடுப்பில் அரசுக்கு உரிய சட்ட ஆலோசனை வழங்கிய முன்னாள் அரசு தலைமை வழக்குறைஞர் முத்துகுமாரசாமி மற்றும் என்னை சந்திக்கும்போதெல்லாம் "அம்மா விதை நெல் மணிகள் தருகிறேன். பயிரிடுங்கள்" என்று வாஞ்சையுடன் பேசிய திரு.

நெல் ஜெயராமன் ஆகியோர் மரண நிகழ்வுகளில் கலந்து கொள்ளவும் உணர்வுகளை பகிர்ந்து கொள்ளவும் முடியவில்லை என்ற வருத்தம், ஏக்கம் இருக்கிறது. அதற்கான தீர்வாகவே கீச்சிற்குள் (ட்விட்டர்) வந்தேன். எனது எண்ணங்களை, உணர்வுகளை நான் சொல்ல அதனை திரு.செல்வராஜ், திரு.சிவக்குமார் உள்ளிட்டோர் உரிய வடிவத்தில் எனது ஒப்புதல் பெற்று வெளியிடுகின்றனர். தொடர்ந்து தொடர்பில் இருப்போம்' எனக் கூறியுள்ளனர்.

-அருள் திலீபன்

More News >>