குட்கா ஊழல் வழக்கில் அமைச்சர் விஜயபாஸ்கர் ராஜினாமாவா? எந்த நேரத்திலும் கைது?
குட்கா முறைகேடு வழக்கில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் முன்னாள் அமைச்சர் ரமணாவும் எந்நேரத்திலும் சி.பி.ஐ.யால் கைது செய்யப்படலாம் என்ற பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அமைச்சர் பதவியை விஜயபாஸ்கர் ராஜினாமா செய்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம் கொடுத்துள்ளதாகவும் தகவல்கள் ரெக்கை கட்டிப் பறக்கிறது.
குட்கா முறைகேடு வழக்கு விசாரணையை சி.பி.ஐ தரப்பு தீவிரப்படுத்தியுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக சென்னை சி.பி.ஐ. அலுவலகத்தில் வைத்து அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் ரமணா, விஜயபாஸ்கரின் உதவியாளர் சரவணன் ஆகியோரிடம் தொடர் விசாரணை நடைபெற்றது.
மூவரிடமும் தனித்தனியே பல மணி நேரம் கிடுக்கிப்பிடி விசாரணையை மேற்கொண்ட சி.பி.ஐ. அதிகாரிகள் துருவித் துருவி விசாரித்தனர். சட்ட விரோதமாக குட்கா ஆலை நடத்தி பிடிபட்ட மாதவராவ், சீனிவாசராவ் ஆகியோரிடம் கைப்பற்றப்பட்ட டைரியில் இடம்பெற்ற பெயர்கள் அடிப்படையில் விசாரணையில் மூவரிடமும் அடுக்கடுக்காக கேள்விகள் கேட்டு துளைத்துள்ளனர்.
ஆதாரங்களுடன் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திணறியுள்ளனர். விசாரணை முடிவில் 3 பேருக்கு எதிரான வலுவான ஆதாரங்கள் கிடைத்துள்ள நிலையில் அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் ரமணா, விஜயபாஸ்கரின் உதவியாளர் சரவணன் ஆகியோர் சிபிஐயால் கைது செய்யப்படும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாக தகவல்கள் கசிந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சி.பி.ஐ.யின் அசுர வேகம் அதிமுக அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் விஜயபாஸ்கரை அமைச்சர் பதவியிலிருந்து கழற்றி விட முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடி முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
இதன் தொடர்ச்சியாக இன்று காலை விஜயபாஸ்கரை முதல்வர் எடப்பாடியார் தமது இல்லத்ததிற்கு வரவழைத்து ராஜினாமா கடிதம் வாங்கியுள்ளதாகவும் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் குட்கா விவகாரத்தில் அடுத்தடுத்து பல்வேறு திருப்பங்கள் ஏற்பட்டு தமிழக அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்று தெரிகிறது.
-அருள் திலீபன்