மேடையிலேயே திருநாவுக்கரசருக்கு செக்- தமிழக காங். தலைவராக பீட்டர் அல்போன்ஸை முன்மொழியும் ஸ்டாலின்?
சிலை திறப்பை முன்வைத்து தேசிய அளவில் கூட்டணி திரியைக் கொளுத்திவிட்டிருக்கிறார் ஸ்டாலின். கூடவே, திருநாவுக்கரசருக்கும் சேர்த்து கிலியைக் கொடுத்திருக்கிறார். நேற்றைய கூட்டத்தில் திருநா நடத்தப்பட்ட விதத்தைத்தான் சொல்கிறார்கள் கதராடைக் கட்சியினர்.
அண்ணா அறிவாலயத்தில் நடந்த கலைஞர் சிலை திறப்பு விழாவில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கலந்து கொள்ள, ரஜினி, பிரபு, வடிவேலு, நாசர் உட்பட பல்வேறு திரைப் பிரபலங்களும் கலந்து கொண்டனர். தேசிய அளவில் உள்ள தலைவர்களில் ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக முதன்முதலாக முன்மொழிந்தது ஸ்டாலின் மட்டும்தான். தேசிய தலைவர்கள் அணிவகுக்க, கருணாநிதி சிலைத் திறப்பு விழாவை வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.
நீண்ட நாட்களாக தமிழகம் பக்கமே வராமல் இருந்த சோனியா காந்தியை, சிலை திறப்பை காரணமாக வைத்து, சென்னைக்கு வர வைத்து காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணியை பலப்படுத்தியிருக்கிறார். இதில் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறாராம் ராகுல். இன்றைக்கு நடக்கவிருக்கும் ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மாகாண முதல்வர்களின் பதவியேற்பு வைபவத்திலும் இது எதிரொலித்தது.
இந்த பலப்படுத்தல் முயற்சியால் அதிகம் நொந்து போய் இருப்பது திருநாவுக்கரசர் தானாம். சசிகலா அண்ட் கோவை முன்மொழிந்து ராகுலிடம் நல்லபெயரை வாங்க எவ்வளவோ முயற்சி செய்தார். அனைத்தும் வீண் போய்விட்டது. அழைப்பிதழ் கொடுப்பதற்காக ஸ்டாலின் டெல்லி போனபோது நடந்த விஷயங்களும் அவருக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளதாம். நேற்று நடந்த சிலை திறப்பு விழா நிகழ்வில், மேடையில் கனிமொழியும் துரைமுருகனும் உட்கார்ந்து கொண்டனர்.
சீட் கிடைக்கும் என மேடையிலேயே காத்திருந்தார் திருநா. அவருக்கு இடம் கொடுக்கும் முடிவில் மற்றவர்கள் இல்லை. 2 நிமிடங்கள் அவர் மேடையிலேயே நின்று கொண்டிருந்தார். மற்றவர்கள் எல்லாம் உட்கார்ந்திருந்தனர். இதனால் தர்மசங்கடமாக மேடையில் இருந்து இறங்கிவிட்டார். விரைவில் அவரை மாற்றிவிட்டு, பீட்டர் அல்போன்ஸைக் கொண்டு வருவதற்கான வேலைகளில் இறங்கியிருக்கிறார் ஸ்டாலின். இது நடந்தால் ஸ்டாலின் சொல்வதைத்தான் இனி டெல்லி கேட்கும் என நம்பலாம் என்கின்றனர் திமுக முகாமில்.
-அருள் திலீபன்