துபாயில் கம்ப்யூட்டர் நிறுவனம் நடத்தும் கேரள சிறுவன்

கேரளாவில் பிறந்து தற்போது துபாயில் வசித்து வரும் சிறுவன், தனியாக கம்ப்யூட்டர் நிறுவனம் நடத்தும் அளவு கணினி அறிவில் சிறந்து விளங்குவது வியப்பை அளிக்கிறது.

திருவல்லாவில் பிறந்த ஆதித்யன் ராஜேஷுக்கு ஐந்து வயதானபோது அவர்கள் குடும்பம் துபாய்க்கு குடிபெயர்ந்தது. ஆதித்யனின் தந்தையின் மூலம் பிபிசி டைப்பிங் என்ற இணையதளத்தை அவருக்கு அறிமுகம் செய்தார். அந்த இணையதளம் சிறுவருக்கு தட்டெழுத்து பயிற்சி செய்ய உதவுவதாகும்.

படிப்படியாக மென்பொருளை ஆர்வத்துடன் கற்றுக்கொண்ட ஆதித்யன், தனது ஒன்பதாவது வயதில் மொபைல் செயலி ஒன்றை வடிவமைத்தார். நேரப்போக்குக்காக அவர் செய்த முயற்சிகள், அவரது கணினி அறிவை கூர்மையாக்கின. பல்வேறு நிறுவனங்களுக்கு இலச்சினைகளையும் இணையதளங்களை அவர் உருவாக்கியுள்ளார்.

தற்போது பதிமூன்று வயதாகும் ஆதித்யன் ராஜேஷ், தன்னுடன் படிக்கும் நண்பர்களை சேர்த்துக் கொண்டு 'டிரைநெட் சொல்யூஷன்ஸ்' என்ற பெயரில் சொந்தமாக நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். மொத்தம் மூன்று பேர் பணிபுரியும் டிரைநெட் சொல்யூஷன்ஸுக்கு பன்னிரண்டு வாடிக்கையாளர்கள் உள்ளனர் என்றும் முறைப்படி நிறுவனத்திற்கு உரிமையாளராக பதினெட்டு வயது வரைக்கும் காத்திருக்க வேண்டியது உள்ளதென்றும் கலீஜ் டைம்ஸ் என்ற பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் ஆதித்யன் கூறியுள்ளார்.

கோடிங் மற்றும் டிசைனிங் வேலைகளை இந்நிறுவனம் செய்து வருகிறது.

More News >>