2018ம் ஆண்டு பிரபஞ்ச அழகியாக மகுடம் சூடினார் பிலிப்பைன்ஸின் கேட்ரியோனா க்ரே!

பாங்காக்கில் இன்று நடைபெற்ற பிரபஞ்ச அழகி 2018-க்கான இறுதிப்போட்டியில், பிலிப்பைன்ஸ் நாட்டு அழகி கேட்ரியனோ க்ரே மகுடம் சூடினார்.

மிஸ் யூனிவர்ஸ் என அழைக்கப்படும் பிரபஞ்ச அழகி போட்டி தாய்லாந்தின் தலைநகரான பாங்காக்கில் கடந்த சில வாரங்களாக நடைபெற்று வருகிறது. அதன் இறுதிப் போட்டி திங்கட்கிழமையான இன்று காலை நடைபெற்றது.

இதில், 24வயது பிலிப்பைன்ஸ் நாட்டு அழகி கேட்ரியோனா 2018ம் ஆண்டின் பிரபஞ்ச அழகியாக மகுடம் சூடினார். அவருக்கு 2017ம் ஆண்டின் பிரபஞ்ச அழகியான தென்னாப்பிரிக்க அழகி டெமி லெய் நேய் பீட்டர்ஸ் வைர மகுடத்தை சூட்டினார்.

இந்திய நேரப்படி இன்று காலை நடைபெற்ற இறுதிப் போட்டியில், பிலிப்பைன்ஸ் நாட்டு அழகி கட்ரியோனா க்ரே, தென்னாப்ரிக்க நாட்டு அழகி டாமரின் க்ரீன் மற்றும் வெனிசுலாவின் ஸ்டெஃபனி குட்டரஸ் ஆகிய மூவரும் இறுதிச் சுற்றுக்கு தேர்வாகி போட்டியிட்டனர்.

இதில், முதலில் மூன்றாவது இடத்துக்கான அழகியை தொகுப்பாளர் அறிவித்தார். வெனிசுலாவின் ஸ்டெஃபனி குட்டரஸ் மூன்றாவது அழகியாக தேர்வு செய்யப்பட்டபோது, உற்சாகத்தில் சந்தோசமடைந்தார். 

அடுத்ததாக 2018ம் ஆண்டின் பிரபஞ்ச அழகியாக யார் வெற்றிப் பெறப் போகிறார் என்ற விறுவிறுப்பு உலக ரசிகர்களை ஈர்த்தது. இரு நாட்டு அழகிகளும், தோளுடன் தோள் கோர்த்து, அந்த வெற்றி அறிவிப்புக்காக காத்திருந்தனர்.

இறுதியாக,, பிலிப்பைன்ஸை சேர்ந்த கேட்ரியோனா க்ரே பிரபஞ்ச அழகியாக அறிவிக்கப்பட்டார். வெற்றிப் பெற்ற கேட்ரியோனா க்ரேவுக்கு முன்னாள் பிரபஞ்ச அழகி டெமி லெய் நேய் பீட்டர்ஸ் மகுடம் சூட்டினார். ரன்னர் - அப் மற்றும் 2வது இடத்திற்கு தென்னாப்ரிக்காவின் டாமரின் க்ரீன் தேர்வானார். 

பிரபஞ்ச அழகி 2018ம் ஆண்டு அழகி போட்டியில், 22வயதான இந்திய அழகி நேஹல் சுதாசமா இந்தியாவின் சார்பாக அனுப்பப்பட்டார். ஆனால், டாப் 20ம் இடத்தில் கூட அவர் இடம்பெறவில்லை.  இறுதியாக 2000 ஆவது ஆண்டில் இந்தியாவின் லாரா தத்தா மிஸ் யூனிவர்ஸ் பட்டம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபஞ்ச அழகிப் போட்டியில் 4வது முறையாக பிலிப்பைன்ஸ் நாட்டு அழகி தேர்வாகி உள்ளார் என்பது கூடுதல் தகவல்.

More News >>