அழகிரிக்கு திமுகவில் நோ ரீ எண்ட்ரி..ஸ்டாலின் திட்டவட்டம்! உதயமாகிறது கலைஞர் திமுக?
திமுகவில் மு.க. அழகிரியை மீண்டும் சேர்ப்பது இல்லை என்பதில் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக இருக்கிறார். இதனால் தனிக்கட்சி தொடங்கி திமுகவுக்கு எதிராக ஒரு கூட்டணியை அழகிரி உருவாக்குவார் என்கின்றன அவரது ஆதரவாளர்கள். அண்ணா திமுகவைப் போல கலைஞர் திமுக என பெயர் வைப்பது குறித்தும் அழகிரி ஆதரவாளர்கள் விவாதிக்க தொடங்கிவிட்டனராம்.
கருணாநிதி மறைவுக்குப் பின்னர் அழகிரி கலகக் குரல் எழுப்பிப் பார்த்தார். ஆனால் திமுகவில் சலசலப்பு ஏற்படவில்லை.
ஒருகட்டத்தில் ஸ்டாலினை தலைவராக ஏற்பதாகவும் அறிவித்தார். ஆனாலும் அறிவாலயத்தில் இருந்து எந்த சிக்னலும் வரவில்லை.
இதனால் தமது பலத்தை நிரூபிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டார். சென்னையில் கருணாநிதி நினைவிடம் நோக்கி பேரணி மற்றும் கருணாநிதி நினைவஞ்சலி நிகழ்ச்சிகளை நடத்திக் காட்டினார். திமுகவில் அதிருப்தியாக இருந்தவர் அழகிரியுடன் கை கோர்த்தனர்.
ஆனாலும் கூட ஸ்டாலின் தரப்பு அசரவில்லை. அதேநேரத்தில் அழகிரி ஆதரவாளர்களுக்கு புதிய உறுப்பினர் அட்டை வழங்காமல் ஓரம்கட்டும் வேலைகளும் நடந்தன.
லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில் இனியும் அமைதி காப்பது இல்லை என்கிற முடிவுக்கு அழகிரி வந்துவிட்டாராம். ஸ்டாலின் தரப்பு தம்மை நிச்சயம் திமுகவில் சேர்க்காது என்பது திட்டவட்டமாகிவிட்டதால் தனிக்கட்சியை தொடங்கலாம் என அழகிரி நினைக்கிறாராம்.
அத்துடன் வரும் தேர்தலில் திமுகவால் புறக்கணிக்கப்படுகிற கட்சிகளை தம் பக்கம் இழுத்து ஒரு புதிய கூட்டணியை உருவாக்குகிற திட்டத்தையும் வைத்திருக்கிறார் அழகிரி என்கின்றன அவரது ஆதரவு வட்டாரங்கள்.