பெர்த் டெஸ்ட்: இந்திய அணியை பழி தீர்த்தது ஆஸ்திரேலிய அணி!
அடிலெய்டு டெஸ்ட்டில் ஆஸ்திரேலிய அணியை இந்திய அணி வீழ்த்திய நிலையில், பெர்த் டெஸ்ட்டில் இந்திய அணியை பழி தீர்த்தது ஆஸ்திரேலிய அணி.
நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
இரு அணிகளும் ஒன்றுக்கு ஒன்று சளைத்ததல்ல என நிரூபித்து வருகின்றன. அடிலெய்டில் நடைபெற்ற முதல் டெஸ்ட்டில் பல ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலிய அணியை சொந்த மண்ணில் மண்ணைக் கவ்வ வைத்து கோலி அண்ட் கோ சாதனை படைத்தனர்.
ஆனால், பெர்த்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி படுதோல்வியை சந்தித்துள்ளது. இதனால், 1-1 என தொடர் சமநிலையில் உள்ளது. மேலும், 2 போட்டிகளில் வெல்லும் அணியே இந்த டெஸ்ட் தொடரை கைப்பற்றும் என்பதால், ரசிகர்களின் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
இரண்டாவது டெஸ்ட்டில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது. முதல் இன்னிங்ஸில் 326 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனை தொடர்ந்து ஆடிய இந்திய அணி 283 ரன்களுக்கே அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. தொடர்ந்து நடைபெற்ற 2வது இன்னிங்ஸிலும் ஆஸி., அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஆனால், முகமது ஷமி 6 விக்கெட்டுகளை வீழ்த்த 243 ரன்களுக்கு சுருண்டது.
287 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற முனைப்புடன் களமிறங்கிய இந்திய அணியின் பேட்ஸ்மேன்களுக்கு ஆஸி., பந்துவீச்சாளர்கள் சிம்ம சொப்பனமாக விளங்கினர். நான்காம் நாள் முடிவான நேற்று 112 ரன்களுக்கு கேப்டன் கோலி உள்பட 5 வீரர்கள் விக்கெட்டுகளை பறிகொடுத்து பெவிலியன் திரும்பினர்.
இன்று காலை தொடங்கிய ஐந்தாம் நாள் ஆட்டத்தின் ஆரம்பம் முதலே ஸ்டார்க் நெருக்கடி கொடுத்தார். இந்திய வீரர் விஹாரி 28 ரன்களுக்கும் ரிஷப் பன்ட் 30 ரன்களுக்கும் ஆட்டமிழக்க, அதற்கு பிறகு வந்த பந்துவீச்சாளர்கள் பேட்டிங்கில் பெரிதாக கைக்கொடுக்காமல் சொர்ப்ப ரன்களில் அவுட்டாகினர். இதனால், இந்திய அணி 140 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி இரண்டாவது டெஸ்ட்டில் படுதோல்வியை தழுவியது.
இரண்டு போட்டிகள் முடிந்துள்ள நிலையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் 1-1 என சமநிலையில் உள்ளது. மூன்றாவது டெஸ்ட் வரும் டிசம்பர் 26ம் தேதி மெல்போர்னில் நடைபெறவுள்ளது. அதில், வெற்றி பெறும் அணிக்கே தொடரை வெல்லும் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.